உடலிலிருந்து கொவிட் - 19 வைரஸை அழிக்கும் எனக் கூறப்படும் , உள்நாட்டில் கை மருந்துகளை தயாரிக்கும் நபர் ஒருவரால் தயாரிக்கப்பட்ட மருந்தொன்று இன்று செவ்வாய்கிழமை மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த தம்மிக பண்டார என்ற நபரால் இந்த மருந்து தயாரிக்கப்பட்டுள்ளதோடு , இன்றைய தினம் இம்மருந்து அந்த பிரதேசத்திலுள்ள மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இதனைப் பாதுகாப்புத்தரப்பினரும் பொது மக்களுடன் வரிசையில் நின்று பெற்றுக் கொண்டனர்.

தொற்று உள்ளானவர்கள் மூன்று நாட்களுக்கும் , ஏனையோர் இரு நாட்களுக்கும் இதனை உட்கொள்ள வேண்டும் என மருந்தை தயாரித்த நபர் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த மருந்து குறித்து அரசாங்கம் விஞ்ஞானபூர்வமாக ஆராயப்பட்டு வருவதாகவும் , இது பயன்தரக் கூடியது என்றால் மேலைத்தேய வைத்தியர்கள் இனக்கம் தெரிவிக்கும்பட்சத்தில் மக்களுக்கு பகிர்ந்தளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்கிழமை இணையவழியூடாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் , ஊடகவியலாளர்களால் குறித்த மருந்து தொடர்பில் கேட்க்கப்பட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.