(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

வடக்கு கிழக்கு தமிழர் பிரதிநிதிகள் ஒத்துழைப்பு வழங்கினாலும் வழங்காவிட்டாலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் வடக்குக்கான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார். 

கார்த்திகை விளக்குகளை எட்டி உதைத்து உடைத்தெறிந்த இராணுவம், பொலிசாருக்கு  எதிராக விசாரணை வேண்டும்: ஸ்ரீதரன் | Virakesari.lk

இந்தக் கருத்திற்கு பதில் கருத்தை முன்வைத்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஸ்ரீதரன் எம்.பி, வடக்கு கிழக்கின் அபிவிருத்தியில் நாம் ஒருபோதும் தடையாக இருக்கப்போவதில்லை, ஆனால் யுத்தத்திற்கு வடக்கு கிழக்கிற்காக ஒதுக்கிய  நிதியை வைத்தே தெற்கின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டது என்பதையும் மறந்துவிடக்கூடாது என்றார்.

 பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை, வரவு செலவு திட்ட விவாதத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றிய செல்வராஜா கஜேந்திரன் எம்.பி, வடக்கு கிழக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியாக வேண்டும், அதேபோல் புனர்வாழ்வு வழங்கப்பட்ட முன்னாள் போராளிகளை கருத்தில் கொண்டு அவர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்க வேண்டும் என தெரிவித்தார், 

இதனை அடுத்து ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய ஆளும் தரப்பு உறுப்பினர் சுரேன் ராகவன், "வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழர் தரப்பினர் இந்த சபையில் பொய்களை கூறுகின்றனர். இன்று காற்றாலை மின் நிலையம் ஒன்று திறந்துவைக்கப்படுகின்றது. ஆனால் அதற்கு கூட இவர்கள் செல்லவில்லை" என்றார்.

இதன்போது சபையில் அமர்ந்திருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஸ்ரீதரன் எம்.பி, "சுரேன் ராகவன் எம்.பியின் கருத்து பிழையானது, நாங்கள் யாரும் அபிவிருத்திக்கு தடையானவர்கள் அல்ல. எமது மண்ணில் முன்னெடுக்க வேண்டிய அபிவிருத்திகள் குறித்தே செல்வராஜா கஜேந்திரன் எம்.பியும் கூறினார். 

இதனை சரியாக விளங்கிக்கொண்டு எவரும் பேசவேண்டும். காற்றாலை நிலையம் திறப்பது குறித்து எமக்கு தெரியாது, எவரும் அறிவிக்கவும் இல்லை அழைப்பு விடுக்கப்படவும் இல்லை. பாராளுமன்றத்தில் இருக்கும் நாம் வெற்றிலையில் மைபார்த்து நிகழ்வுகளுக்கு செல்ல முடியாது. அரச விசுவாசம் காட்டவேண்டும் என்பதற்காக ராஹவன் தவறான கருத்துக்களை சபையில் தெரிவிக்க வேண்டாம்" என்றார்.

இதன்போது சபையில் இருந்த அமைச்சர் நாமல் ராஜபக் ஷ, வடக்கு கிழக்கு அபிவிருத்தியில் தமது முன்னைய அரசாங்கம் எடுத்துக்கொண்ட பங்களிப்புகள் குறித்தும், அடுத்ததாக முன்னெடுக்கவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்து கருத்துக்களை முன்வைத்தார். 

இதன்போது மீண்டும் பதில் தெரிவித்த ஸ்ரீதரன் எம்.பி, "யுத்தத்திற்கு பின்னர் வடக்கு கிழக்கில் அபிவிருத்தி நடந்தது என்பதை நாம் நிராகரிக்கவில்லை, ஆனால் வடக்கு கிழக்கிற்காக ஒதுக்கிய  நிதியை வைத்தே தெற்கின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டது என்பது நீங்கள் மறந்துவிடக்கூடாது. பாரிய அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படும் என கூறிக்கொண்டு வடக்குக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பெருமலவினானவை தெற்கிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது என்பதையும் நீங்கள் ஏற்றுகொள்ள வேண்டும். 

இதனை நீங்கள் மறைக்கக்கூடாது. உங்களின் அபிவிருத்திக்கு எப்போதுமே தயாராக உள்ளோம். எமது மக்களின் நலன் கருத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் ஒன்று சேர்ந்து பயணிக்க நாம் தயாராகவே உள்ளோம்" என்றார்.