(இராஜதுரை ஹஷான்)

மாகாண சபை தேர்தலை பழைய தேர்தல் முறையிலாவது விரைவில்  நடத்த தேர்தல் ஆணைக்குழுவிடம் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படும் என பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர்  பசில் ராஜபக்‌ஷ   தெரிவித்தார்.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுடன் இன்று கொழும்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நல்லாட்சி அரசாங்கம் மாகாண சபை தேர்தலை பிற்போடும் நோக்கில் தேர்தல் முறைமை தொடர்பான சட்டத்தை இயற்றியது.

மாகாண சபைகளின் பதவி காலம் நிறைவு பெற்று இரண்டரை வருடகாலமாக மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபை நிர்வாகம் முன்னெடுக்கப்படுகின்றன. இதனால் பலதரப்பட்ட வழிகளில் மக்கள் நெருக்கடியினை எதிர்க் கொண்டுள்ளார்கள்.

மாகாண சபை தேர்தலை நடத்துவதில் உள்ள சட்ட சிக்களுக்கு தீர்வு கண்டு பழைய தேர்தல் முறைமையிலாவது தேர்தலை விரைவாக நடத்த தேர்தல் ஆணைக்குழுவிடம் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளது என்றார்.

மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்த மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

தேர்தல் முறைமையில் உள்ள சட்ட சிக்கலுக்கு தீர்வு காணவும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்படவுள்ளது என மாகாண சபைகள்  மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்தார்.