(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ராஜபக்ஷ ஆட்சியில் தோட்டப்புறங்களுக்கென மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நல்லாட்சியில் முழுமையாக கைவிடப்பட்டது, இன்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் தோட்டப்புறங்களுக்கும் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஆளும் தரப்பு உறுப்பினர்  எம்.ராமேஸ்வரன் சபையில் தெரிவித்தார்.

ஆயிரம் ரூபாவை எப்படியாவது பெற்றுக்கொடுத்தே தீருவோம் - மருதபாண்டி ராமேஸ்வரன்  | Virakesari.lk

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை, வரவு செலவு திட்ட விவாதத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக ஆட்சி செய்த காலத்தில் எமது பகுதிகள் காப்பட் வீதிகளாக புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் நல்லாட்சி அரசாங்கம் அரசியல் பழிவாங்கலின் ஊடாக இந்த அபிவிருத்தி திட்டங்கள் அனைத்துமே நிறுத்தப்பட்டு எமது மக்கள் புறக்கணிக்கப்பட்டனர். 

எனினும்  இப்போது மீண்டும் எமக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் பெருந்தோட்ட பகுதிகளில் பாதைகள் மிக மோசமானதாக இருந்தது, எனினும் மீண்டும் தோட்டப்பகுதிகளில் காப்பட் வீதிகளை உருவாக்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

 கடந்த காலத்தில் போல மீண்டும் எமது பகுதிகளுக்கான அபிவிருத்திகளை செய்யும் நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த ஆட்சியில் அரசியல் பழிவாங்கல் காரணமாக நல்ல வேலைகள் பல நிறுத்தப்பட்டன. மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் திட்டமிட்டே நல்லாட்சியில் நிறுத்தப்பட்டது. இன்று எமது ஆட்சியில் நாட்டுக்கான அபிவிருத்தி திட்டங்கள் நகரங்களுடன் நின்றுவிடாது கிராமங்களுக்கும், தோட்டப்புறங்களுக்கும் வருகின்றது, சகல பகுதிகளும் ஒரே அளவில் அபிவிருத்தி செய்யப்படும் ஆட்சி இன்று உருவாகியுள்ளது. 

நகரம், கிராமம்,தோட்டம் என்ற பாகுபாடுகள் இல்லாது எமது மக்களுக்கு பாரிய அளவிலான அபிவிருத்திகள் உருவாகும் வாய்ப்பு கிடைத்துள்ளமைக்காக ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும், அமைச்சர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.