(இராஜதுரை ஹஷான்)

மஹிந்த ராஜபக்ஷ தேசிய டெலி சினிமா பூங்காவின் அத்தியாவசிய மீள் புனரமைப்பு  பணிகளை துரிதமாக முன்னெடுக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

உள்ளூர் சினிமா மற்றும் டெலி சினிமாத் துறைக்குத் தேவையான ஒளிப்பதிவுக் காட்சிக்கூட வசதிகள் மற்றும் குறித்த துறையின் நிபுணர்களுக்கான தங்குமிடம் மற்றும் ஏனைய வசதிகளை சலுகை அடிப்படையில் வழங்குவதன் மூலம் உள்ளுர் சினிமா மற்றும் டெலி சினிமாத்துறையை  மேம்படுத்த மஹிந்த ராஜபக்ச தேசிய டெலி சினிமா  பூங்கா  அமைக்கப்பட்டது.

2010 தொடக்கம் இதுவரை 13 சினிமா ஒளிப்பதிவுகளும், டெலி சினிமா தயாரிப்புக்கள் 18 உம், மற்றும் விளம்பரப் பாடல்கள் 08 உம் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த 04 வருடங்களில் இப்பூங்கா சரியான வகையில் பராமரிக்கப்படாததால், நிறுவனத்தின் பல்வேறு பௌதீக வளங்கள் அழிவடைந்துள்ளன.

குறித்த டெலி சினிமா பூங்காவின்  அத்தியாவசிய திருத்த வேலைகள் துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், அதற்காக 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் திறைசேரியிலிருந்து நிதியொதுக்கீடு செய்வதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர், பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.