(இராஜதுரை ஹஷான்)

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்தப்பட்ட நான்கு வீடமைப்பு கருத்திட்டங்களுக்கு பணம் செலுத்தும் பொறிமுறையை திருத்தம் செய்ய பிரதமர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குறைந்த வருமானம் கொண்ட வீடமைப்புக்கான ஒரு கருத்திட்டத்திற்காக 300 மில்லியன் ரூபாய் வீதம் 04 கருத்திட்டங்களை மேற்கொள்வதற்காக இந்திய அரசாங்கம் நிதியுதவி வழங்கியுள்ளதுடன், குறித்த திட்டம் தேசிய வீடமைப்பு அதிகார சபையால் முன்னெடுக்கப்படுகிறது. 

பயனாளிகள் குறித்த கட்டுமானப் பணிகளுக்கான செலவுகளை கட்டம் கட்டமாக பூர்த்தி செய்த பின்னர் தேசிய வீடமைப்பு அதிகாரசபை மூலம் இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு சமர்ப்பிக்கும் முன்னேற்ற அறிக்கையின் பிரகாரம் குறித்த பணத்தை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அவ்வாறு மேற்கொள்வதற்கு குறித்த பணத்தொகை பயனாளிகளிடம் இல்லாத காரணத்தினால்  திட்டத்தின் முன்னேற்றம்  குறைவடைந்தது. 

அதனால் வீடமைப்பு ஆரம்பிக்கும் போதே குறித்த கட்டத்திற்கான தவணைக் கொடுப்பனவை செலுத்துவதற்கும், அதன் பின்னர் கட்டுமானத்தின் முன்னேற்றத்திற்கமைய தவணைக் கொடுப்பனவுகளை விடுவிப்பதற்கும், இந்திய உயர்ஸ்தானிகராலயம் உடன்பாடு தெரிவித்துள்ளது. 

அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.