கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசியை கண்டுடிக்கும் பணிகள் தீவிரமாக நடை பெற்று வரும் நேரத்தில்,  மறுபுறம் மக்கள் கடவுள் நம்பிக்கையில் வேண்டுதல்களை நிறைவேற்றிய வண்ணம் உள்ளனர் என்றே சொல்லவேண்டும்.

இந்நிலையில், கொரோனோவை குணப்படுத்தும் என்ற நம்பிக்கையில் பிரான்ஸ் நாட்டு மக்கள் தாங்கள் புனிதமாக கருதும் மரத்தில் முகக்கவசங்களை கட்டி வருகின்றனர்.

மக்கள் கோவில்களில் உள்ள மரங்களில் குழந்தைகள் வேண்டி தொட்டில் கட்டுவதும் வேறு வேண்டுதல்களுக்காக மஞ்சள் துணிகள் கட்டுவதும் நம்முடைய நாட்டு வழக்கம். இந்த வினோதமான நம்பிக்கை பல வெளி நாடுகளையும் இருப்பது கொரோனா வழியாக தெரிய வந்துள்ளது.

வட பிரான்சில் ஹஸ்னான் என்ற பகுதியில் உள்ள மரத்தை பல்வேறு நோய்களை குணப்படுத்தும் மரம் என்று அங்கு வசிக்கும் மக்கள் நம்புகிறார்கள்.

இந்த மரத்துக்கு பெயரே ஸ்பிரிச்சுவல் மரம் என்று சொல்கிறார்கள். மரக்கிளைகளில் தங்களுக்கு உள்ள நோய்கள் குணமாக வேண்டும் என்று வேண்டிக்கொண்டு துணிகள் கட்டுவது நெடுநாள் பழக்கமாம். ரோமானியர்கள் காலத்துக்கு முன்பிருந்தே இந்த வழக்கம் இங்கே தொடர்வதாக சொல்லப்படுகிறது.

இப்போதெல்லாம் கொரோனா குணமாக வேண்டும் என்ற வேண்டிக்கொண்டு பலரும் முகக்கவசங்களை கட்டி தொங்க விடுகிறார்களாம். இதனால், முகக்கவசங்கள் நிறைந்து இந்த மரம் காணப்படுகிறது. அது மட்டுமல்லாமல், நம் நாட்டு மக்களை போன்றே குழந்தை வரம் வேண்டியும் இந்த மரத்தில் குழந்தைகளின் உடைகளை கட்டி தொங்கவிடுவதும் உண்டாம்.

ஹஸ்னானில் வசிக்கும் போஸியோ என்பவர் கூறுகையில், '' அயர்லாந்து நாட்டிலும் மரத்தில் வேண்டிக்கொண்டு துணிகளை கட்டித்தொங்க விடுவார்கள். பல நாடுகளில் இந்த பழக்கமுள்ளது. மருத்துவமும் அறிவியலும் தோற்றுப் போகும் போது மக்கள் கடவுளை நம்பத் தொடங்கி விடுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.