(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோத மணல் அகழ்வுகளைத் தடுக்கும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மீது சட்ட ஒழுங்கு பாய்வதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. கோவிந்தன் கருணாகரன் சபையில் தெரிவித்தார்.

 அவர் மேலும் கூறுகையில், கட்டுப்பாடற்ற விதத்தில் வளங்கள் சுரண்டப்படுகின்றன. மட்டக்களப்பு மண் வளங்கள், ஆற்றுப்படுக்கைகள் அடியோடு அள்ளப்படுகிறது. இதற்குப் பாரிய இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனைத் தடுக்க முயற்சிக்கும் பொதுமக்கள் மீது, சட்ட ஒழுங்குப் பாய்கிறது. இதனை எல்லாம் கூறும்போது நாங்கள் உங்களுக்கு  தேசத்துரோகிகளாகின்றோம். ஆனால் நாட்டின் வளங்களை சுரண்டும் மாபியாக்கள் தேசப் பற்றாளர்களாகிறார்கள்.

மட்டக்களப்பில்  சந்தனமடு ஆற்றில் மணல் அள்ளப்படுகின்றது. இதனால் பெரும் வெள்ளங்கள் ஏற்பட்டு, பிரதேசங்கள் அழியும் நிலையும் காணப்படுகின்றன. இதேபோல்  மட்டக்களப்பில் 300 கிலோ மீற்றர்  யானை வேலி அமைக்கப்பட வேண்டும். எனினும் வெறும் 200 கிலோ மீற்றருக்கே யானை வேலி அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

இதற்குப் பதிலளித்த சுற்றாடல் அமைச்சர மஹிந்த அமரவீர, இப்பிரதேசங்களில் ஹெக் டேயர்களில் மணல் அள்ளுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. சட்டவிரோதமாக இப்பிரதேசங்களில் அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தால், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.  சட்டவிரோத மணல் அகழ்வுகள் தொடர்பில் தகவல்கள் தரும் பட்சத்தில் நடவடிக்கை எடுப்பதற்குத் தயாராக உள்ளேன் என்றார்.

யானை வேலிகள் தொடர்பிலானப் பிரச்சினைகளுக்குப் பதிலளித்த வனஜீவராசிகள், வனப் பாதுகாப்புஅமைச்சர் சி.பி.ரத்நாயக்க, “அவ்வளவு பொய் சொல்ல வேண்டாம். கொஞ்சம் கொஞ்சம் பொய் சொல்லுங்கள் என தமிழில் கூறியதுடன் இது  தொடர்பில் தான் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.