இலங்கை  வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரை இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே நேற்றைய தினம்  வெளிநாட்டு உறவுகள் அமைச்சில் சந்தித்தார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்தில் கடற்பாதுகாப்பு குறித்த நான்காவது முத்தரப்பு மாநாட்டினை  கடந்த நவம்பர் 28 ஆம் திகதி கொழும்பில் ஏற்பாடு செய்தமைக்காக இந்திய உயர் ஸ்தானிகர் இலங்கை அரசாங்கத்திற்கு இதன்போது நன்றியினை தெரிவித்திருந்தார்.  

இந்த மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் கொள்கை நோக்குடன் உரை நிகழ்த்திய அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவுக்கு இந்திய உயர் ஸ்தானிகர் பாராட்டுக்களையும் நன்றியினையும் தெரிவித்திருந்தார்.

பயங்கரவாதம், திட்டமிட்ட குற்றச் செயல்கள், அடிப்படைவாதம் போதைப்பொருள் கடத்தல் போன்ற சவால்களை எதிர்கொள்வதற்கு பிராந்தியத்திலுள்ள, குறிப்பாக இந்தியா இலங்கை உட்பட்ட நாடுகள், மத்தியில் மிகவும் உயர் மட்டத்திலான ஒத்துழைப்பு அவசியம் என இந்திய உயர் ஸ்தானிகரும் அமைச்சர்களும் இதன்போது ஏற்றுக்கொண்டனர்.

அத்துடன் எதிர்வரும் ஆண்டுகளில் இந்தியா-இலங்கை உறவானது புதிய மட்டத்தினை எட்டும் என இந்திய உயர்ஸ்தானிகர் இந்த சந்தர்ப்பத்தில் தனது நம்பிக்கையினை வெளிப்படுத்தினார்.

கொவிட்-19 காரணமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் அதிக அளவில் சிக்கியிருக்கும் 1500 க்கும் அதிகமான இலங்கையர்களை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்கான கோரிக்கை இந்திய அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டிருந்தமை தொடர்பாக இந்திய உயர் ஸ்தானிகர் சாத்தியமான பதிலினை வழங்கினார்.

இவ்விடயம் தொடர்பாக இரு அரசாங்கங்களும்  இராஜதந்திர மூலங்கள் ஊடாக தீர்வு காணவேண்டிய அவசியம் உள்ளதாகவும் இந்த சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன் மீனவர்களின் விவகாரங்களில் தொடர்பு பட்டிருக்கும் இருதரப்பு அதிகாரிகளுக்கும் இடையில் காணப்படும் மிகவும் நெருக்கமான ஒத்துழைப்பு குறித்து இந்திய உயர் ஸ்தானிகர் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

இவ்வாறான ஒத்துழைப்பு காரணமாக இரு நாடுகளையும் சேர்ந்த மீனவர்களின் உயிர்கள் கடலில் பாதுகாக்கப்படுவதாக உயர் ஸ்தானிகர் இந்த சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

இவ்வருட முற்பகுதியில் சீரற்ற காலநிலை காரணமாக கடலில் உயிரிழந்த இந்திய மீனவர்களின் உடல்களை சொந்த நாட்டிற்கு அனுப்புவதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்டிருந்த சகல முயற்சிகளுக்கும் இந்திய உயர் ஸ்தானிகர் நன்றியினை தெரிவித்திருந்தார். 

ஏற்கனவே காணப்படும் புரிந்துணர்வின் அடிப்படையில் மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகள் குறித்து மனிதாபிமான ரீதியில் அணுக வேண்டிய தேவை இருப்பதனையும் அவர் குறிப்பிட்டார்.

மீனவர் விவகாரத்தில் காணப்படும் சகலவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு தமிழக மாநில அரசாங்கமும் இந்திய மத்திய அரசாங்கமும் சகலவழிகளிலும் மேற்கொண்டுவரும் வலுவான நடவடிக்கைகள் குறித்து இந்த சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டியிருந்த இந்திய உயர் ஸ்தானிகர் அவர்கள், ஆழ்கடல் மீன்பிடியினை தொடர இந்திய மீனவர்களை ஊக்குவித்து அவர்களுக்கு ஆதரவு வழங்குவதற்காக இந்திய அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளையும் இங்கு குறிப்பிட்டார்.

அதுமட்டுமல்லாமல் மீனவர் விவகாரங்களை கையாள்வதற்கான இருதரப்பு பொறிமுறை குறித்த அடுத்த பேச்சுக்களை வெகுவிரைவில் மெய்நிகர் வழிமுறைகள் ஊடாக நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்வைக்கப்பட்ட பாக்கு நீரிணை மற்றும் மன்னார் குடாவுக்கான கூட்டு முகாமைத்துவத்திற்கான கோரிக்கை  தொடர்பாக மிகவும் பரந்தளவில் ஆராயப்பட வேண்டிய தேவை இருப்பதனையும் உயர் ஸ்தானிகர் இந்த சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.