கொழும்பு கிங்ஸ் அணியை 8 விக்கெட்டுகளினால் வீழ்த்தி, அபார வெற்றி பெற்ற காலி கிளாடியேட்டர்ஸ் அணியானது தொடரில் முதல் வெற்றியினை பதிவுசெய்துள்ளது.

லங்கா பிரீமியர் லீக் தொடரின் 14 ஆவது போட்டி நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான கொழும்பு கிங்ஸ் மற்றும் பானுக ராஜபக்ஷ தலைமையிலான காலி கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கிடையே ஆரம்பமானது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிங்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ஓட்டங்களை பெற்றது.

 அணி சார்பில் டி.ஜே.பெல்-டிரம்மண்ட் 44 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 35 ஓட்டங்களையும், தக்ஷில டிசில்வா 27 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

பந்து வீச்சில் காலி அணி சார்பில் அபாரமாக பந்து வீசிய மொஹமட் அமீர் 4 ஓவர்களுக்கு 26 ஓட்டங்களை வழங்கி 5 விக்கெட்டுகளை கைப்பற்ற, சந்தகான் 3 விக்கெட்டுகளையும், தனஞ்சய லக்ஷான் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினார்கள்.

172 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய காலி கிளாடியேட்டர்ஸ் அணியானது 17.3 ஓவர்களை மாத்திரம் எதிர்கொண்டு 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ஓட்டங்களை பெற்று வெற்றியிலக்கை கடந்தது.

அணி சார்பில் தனுஷ்க குணதிலக்க 38 ஓட்டங்களையும், அஸாம் அலி 58 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்க பானுக ராஜபக்ஷ 37 ஓட்டங்களுடனும், அஸாம் கான் 35 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் காலி அணி தொடரில் முதல் வெற்றியை பதிவுசெய்ததுடன், 2 புள்ளிகளை பெற்று பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறியது.

போட்டியின் ஆட்டநாயகனாக ஐந்து விக்கெட்டுகளை அள்ளிய மொஹமட் அமீர் தெரிவானார்.

இதேவேளை நேற்றிரவு இடம்பெற்ற எல்.பி.எல். தொடரின் 15 ஆவது போட்டி திசர பெரேரா தலைமையிலான யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் மற்றும் தசூன் சானக்க தலைமையிலான தம்புள்ளை வைக்கிங்ஸ் அணிகளுக்கிடையே இடம்பெற்றது.

இப் போட்டியில் தம்புள்ளை அணி 7 ஓவர்ளுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து 42 ஓட்டங்களை குவித்திருந்த வேளையில் மழை குறுக்கிட்டமையினால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது.

அதன் பின்னர் தொடர்ந்தும் மழை இடைவிடாது பெய்த காரணத்தினால் போட்டி கைவிடப்பட்டது. இதன் காரணமாக இவ்விரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்பட்டன.

தொடரில் இன்றைய தினம் எதுவித போட்டிகளும் இடம்பெறாத நிலையில் நாளைய தினம் இரு போட்டிகள் நடைபெறவுள்ளது.

அதன்படி நாளை பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகும் தொடரின் 16 ஆவது போட்டியில் கண்டி டஸ்கர்ஸ் மற்றும் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணியும் மோதும். 

இரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகும் 17 ஆவது போட்டியில் காலி கிளாடியேட்டர்ஸ் மற்றும் தம்புள்ள‍ை வைக்கிங்ஸ் அணிகள் மோதவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.