என் அவமானங்களை துடைக்க வேண்டும்; அப்பாவை சிரிக்க வைக்க வேண்டும் என்பதே என் கனவு - வியாஸ்காந்துடனான பிரத்தியேக நேர்காணல்

Published By: Sajishnavan

07 Dec, 2020 | 09:00 PM
image

உலகமே இலங்கை கிரிக்கெட்டை போற்றிக் கொண்டிருந்த காலங்களிலும் சங்கா, மஹேலவின் ஓய்வின் பின் இலங்கை கிரிக்கெட் இல்லாமலேயே போய்விடும் என்று எழுந்த விமர்சனங்களின் போதும் ஐபிஎல் போட்டிகளில் ஒவ்வொரு தமிழ் வீரருக்கு வாய்ப்புக் கிடைக்கும் போதும் இலங்கை அணியின் ஒவ்வொரு தமிழ் ரசிகனும் ஏங்கியது, எப்போது இலங்கை அணியில் ஒரு தமிழ் வீரன் விளையாடப் போகிறான் என்பதாகத்தான் இருக்கும். 

110 வருடங்களுக்கும் மேலாக யாழ் மண்ணில் வடக்கின் பெருஞ்சமர் நடைபெற்று வந்தாலும் அங்கிருந்து ஒரு வீரன் இலங்கைக்காக விளையாடுவது வெறும் கனவாகிப்போவதே வழக்கமாயிருந்தது. ஒருபுறம் நாட்டின் அசாதாரண சூழல், மூன்று தசாப்தகாலப்போர் என சில காரணங்களால்  ஏ9 வீதியோடு சேர்த்து யாழ் மண்ணின் கிரிக்கெட் வீரர்களின் கனவுகளும் இழுத்து மூடப்பட்டன. 

வடக்கில் ஆட்டநாயகனாக ஜொலித்தவர்கள், வெற்றிக்கேடயங்களை குவித்தவர்கள்,  துடுப்புமட்டைகளால் கோட்டை கட்டியவர்கள் எல்லாம் அடுத்தடுத்த வருடங்களிலேயே இன்னொரு முறை கிரிக்கெட் மட்டையினை தொட்டு விட மாட்டோமா என்று ஏக்கத்தோடு போட்டியை தூர நின்று பார்ப்பதை யாழ் மண்ணின் பெருஞ்சமர்களை பார்த்தவர்களுக்கு தனியாய் விளக்கத் தேவையில்லை. 

இவ்வாறிருந்த  வடக்கின் கிரிக்கெட்டுக்கு புதிய பரிமாணமானமொன்றைக் கொடுத்திருக்கிறது எல் பி எல். பலகாலமாக கிடைக்காத அங்கீகாரம் இம்முறை கனவுடன் காத்துக்கிடந்த யாழ் நகருக்கும் யாழ் வீரர்களுக்கும் கிடைத்துள்ளது. 

சர்வதேச கிரிக்கெட் அரங்குகள் உள்ள நகரங்களை மையப்படுத்தி உருவான எல் பி எல் அணிகளுடன், யாழ்ப்பாணத்திற்கான ஓர் அணி உருவாகியுள்ளமை இலங்கை கிரிக்கெட் புத்தகத்தில் யாழ்ப்பாண அத்தியாயத்தின் ஆரம்பத்தை அடிக் கோடிட்டுக் காட்டுகின்றது.

இது இவ்வாறிருக்க  தனது 19வது பிறந்தநாளுக்கு ஒருநாள் முன்னதாக தனது எல்.பி.எல் அறிமுகத்தை பெற்று உலகம் முழுவதும் சொந்த வீட்டுப் பிள்ளையாக கொண்டாடப்பட்ட யாழ் மத்திய கல்லூரி அணியின் தலைவரும் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியவருமான விஜயகாந்த் வியாஸ்காந்தினை நிகழ்நிலையில் வீரகேசரிக்காக நேர்கண்டிருந்தோம். 

முதல் போட்டியிலேயே அனுபவம் வாய்ந்த அதிரடி வீரர்களான அண்ட்ரே ரசல், அஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சந்திமால் ஆகியோருக்கு பந்துவீசி  3 பவுண்டரிகளை மட்டுமே விட்டுக்கொடுத்து மேத்யூஸின் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு மத்தியிலும் முதல் போட்டியில் விளையாடி விக்கெட் வீழ்த்திய களிப்பிலும் இருந்த வியாஸ்காந்த், "அண்ணா 3 மணிக்கு லஞ்ச் மூடிடுவாங்க, அதுக்குள்ள முடிச்சிடுவீங்க தானே?" என்ற பசி கலந்த ஆர்வத்துடன் கேட்க, "20 நிமிஷம் தம்பி முடிஞ்சிடும்" என்று உறுதியளித்து நேர்காணலை ஆரம்பித்தோம். 

கேள்வி - வணக்கம் வியாஸ்காந்த். பிறந்தநாள் வாழ்த்துக்கள். பிறந்தநாள் எப்படி போய்க்கொண்டிருக்கிறது? 

பதில் - ஜாலியா இருக்கு. 

கேள்வி - மிக அனுபவம் வாய்ந்த அஞ்சலோ மெத்தியூஸின் கொழும்பு கிங்ஸ் அணிக்கு எதிராக உங்களுடைய முதலாவது டி20 போட்டி அமைந்திருந்தது. அந்த அனுபவத்தைப் பற்றி சொல்லுங்கள்?

பதில் - அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த எண்ணியிருந்தேன். அதேபோல நேற்று பின்னேரம் நான் விளையாடப் போவதாக சொன்னார்கள். மிக மகிழ்ச்சியாக இருந்தது கொழும்பு கிங்ஸுக்கு எதிரான போட்டி என்பதால் எல்லோரும் வலதுகை துடுப்பாட்ட வீரர்கள்.

எனக்கு பந்துவீச மிக இலகுவாக இருக்கும் என்று எண்ணினேன். அது எனக்கு சிறப்பாக பந்து வீச வேண்டும் என்ற உத்வேகத்தை கொடுத்தது. அவர்களின் அனுபவம் என்னை விட அதிகமாக இருந்தாலும் என்னால் சிறப்பாக பந்து வீச முடியும் என்று நம்பினேன். அதேபோல துடுப்பாட்டம் பந்துவீச்சு இரண்டுமே எனக்கு சந்தோஷமான உணர்வை தந்தது. 

கேள்வி - நேற்றைய போட்டி முடிய உங்களுக்கு கிடைத்த வாழ்த்துக்களில் யாருடைய வாழ்த்து மறக்கமுடியாதது ?

பதில் - டிரெஸ்ஸிங் ரூமுக்கு போனதும் தான் பயன்படுத்திய Glove இனை எனக்கு பரிசாக தந்தார். என்னுடைய முதல் விக்கெட்டை கைப்பற்ற உதவியாக இருந்த அவர் கொடுத்த அந்த பரிசை என்னால் மறக்கவே முடியாது.

முதலாவதாக அம்மாவும் அப்பாவும் என்னை வாழ்த்தினார்கள். என் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கவே அழைத்தார்கள். பின்னர் போட்டியை பற்றியும் கதைத்தோம். எனக்கு யார் வாழ்த்தினாலும் எனக்கு அப்பாவை தான் பிடிக்கும். அப்பாவை சிரிக்க வைக்க வேண்டும் என்றுதான் விளையாடினேன். நான் விளையாடுவதை ஒருமுறையாவது டிவியில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதனை நிறைவேற்றி விட்டேன். தொடர்ந்தும் அதற்காகப் போராடுவேன்.

கேள்வி - இவ்வருட ஆரம்பத்தில் வடக்கின் பெருஞ் சமரில் தலைவராக செயற்பட்ட போது, "நான் நிச்சயமாக தேசிய அணிக்காக ஆடுவேன்" என்று சொன்னீர்கள். அதற்கு உங்கள் அணி வீரர்களின் பங்களிப்பு எவ்வாறாக இருக்கின்றது? குறிப்பாக வனிந்து ஹசரங்க உங்களை தொடர்ந்தும் போட்டி நடைபெறும் போது ஊக்கப்படுத்தினார். அந்த அனுபவம் பற்றி சொல்லுங்கள்?

பதில் -  வனிந்து அய்யாவும் நானும் பிரக்டிஸ் நேரத்தில்கூட மிக நெருக்கமாக தான் இருப்போம். போட்டி போட்டுக் கொண்டு பந்து வீசுவோம்.  2 பேரும் லெக் ஸ்பின்னர்கள் என்பதால் எங்களுக்குள்ளே ஒரு சிறந்த புரிந்துணர்வு எப்போதும் இருக்கும். அவர் Bat பண்ணும் போது நான் Bowl பண்ணுவேன். எனக்கும் அவர் பந்து வீசுவார். என்னுடைய சொந்த அண்ணா போன்ற உணர்வு எனக்கு அவரிடம் உள்ளது. எப்போதுமே நன்றாக மோட்டிவேட் செய்வார். அதேபோல திசர பெரேரா எனக்கு எல்லாவற்றையும் மொழிபெயர்த்துச் சொல்லுவார். இந்த ஒற்றுமை எங்கள் தொடர் வெற்றிகளுக்கு பெரும் காரணம். 

கேள்வி - இலங்கையில் தமிழ்பேசும் வீரர்கள் விளையாடாமல் இருப்பதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. Turf இல்லை, லைட் இல்லை, அனுபவம் இல்லை என்ற குறைகளைத் தாண்டி உங்களுக்கு கிடைத்த இந்த வாய்ப்புக்கு என்ன காரணம்? 

பதில் - நாங்கள் ஆரம்பத்திலிருந்தே Turf இல்லை என்பதை ஒரு குறையாக தான் சொல்லிக் கொண்டே இருந்தோம். ஆனால் இந்த வருடம் Big Match இல்  நாங்கள் மிக மோசமாக விளையாடினோம். அதனால் எதிர்பாராத தோல்வியை தழுவ நேரிட்டது. அந்தத் தோல்வியால் நிறைய அவமானங்களை சந்திக்க நேரிட்டது. அதன் பிறகு மிகவும் கஷ்டப்பட்டேன் Turf ஒரு சாட்டு இல்லை. Turf இல்லாவிட்டாலும் லைட் இல்லாவிட்டாலும் நான் பிரக்டிஸ் பண்ண வேண்டும். எப்படியாவது இலங்கை அணிக்கு உள்ளே போகவேண்டும். நான் அவமானப்பட்டது அப்பாவும் அவமானப்பட்ட மாதிரி. என்னால் தாங்கிக் கொள்ளவே இயலாது. அப்பாவை சிரிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். முழுவதும் இந்த போட்டி அவருக்காகத்தான் டெடிகேட் பண்ணுகிறேன். நான் எந்த உயரத்துக்கு போனாலும் அதுக்கு அப்பாதான் காரணம். யாழ்ப்பாணத்துக்கு எவ்வளவு முக்கியம் என்றால் தமிழ் ஆட்கள் எவ்வளவு விளையாட கஷ்டப்படுவார்களோ அதே அளவுக்கு Turf இருந்தால் கொழும்பிலுள்ள அணிகளுடன் விளையாடுவதில் கஷ்டம் இருக்காது. இலகுவாக அந்த மக்களுக்கு ஏற்றவாறு தம்மை மாற்றிக் கொள்ள முடியும். எவ்வளவு சீக்கிரம் கிடைக்கிறதோ அவ்வளவு சீக்கிரம் Under 19, நேஷனல், எல் பி எல் என்று எல்லா போட்டிகளிலும் யாழ் வீரர்களை பார்க்கலாம். 

நான் Under 19 விளையாடிய காரணத்தால் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை. ஆனால் மற்றவர்களுக்கு அனுபவம் மிகவும் முக்கியம். ஜூனியராக வருபவர்களுக்கு யாழ்ப்பாணக் கிரிக்கெட் வரலாற்றை கட்டியெழுப்பும் அளவுக்கு முக்கியம்.

கேள்வி - உங்கள் அணியில் உள்ள டினோசன், கபில் ராஜ், விஜயராஜ் பற்றி சொல்லுங்கள்? 

பதில் - முதல் முறை விஜயராஜ் அண்ணாவை Under 19 இந்தியா மேட்ச் நேரம் தான் சந்தித்தேன். அப்போது அவ்வளவாக பழக்கம் இல்லை.

கபில் ராஜ் அண்ணா, டினோசன் பற்றி எல்லாம் சொல்ல தேவையே இல்லை. ஒன்றாக Big Match விளையாடிய ஆட்கள் நல்லா சப்போர்ட் பண்ணுவார்கள். எப்போதும் என்னை எதிர் பாடசாலை ஆள் என்று பிரித்து வைத்ததில்லை. நான் விளையாடும் போதும், "நீ பலருடைய கனவை நினைவாக்க விளையாடுகிறாய், நீ விளையாடினால் தான் நாளை நாங்கள் எல்லாரும் விளையாட முடியும்" என்று தட்டிக் கொடுத்து அனுப்பினார்கள். 

கேள்வி ஜப்னா ஸ்டாலியன்ஸ் முதல் போட்டியில் தோற்று இருக்கிறது. இனிவரும் போட்டிகளில் வென்று சாம்பியன் ஆகுமா உங்கள் அணி? 

பதில் - நாங்கள் ஒரு போட்டிக்கு போகும் போது அந்தப் போட்டியை வெற்றி பெற வேண்டும், நாங்கள் தான் சாம்பியன் என்ற எண்ணத்தோடு தான் செல்வோம். இப்போது ஒரு போட்டிதான் தோற்றிருக்கிறோம். அதுவும் அனுபவம் வாய்ந்த கொழும்பு அணியுடன். நாங்கள் வெற்றி மமதையில் விளையாடுவதில்லை. மிகவும் தாழ்மையாக விளையாடுவோம். இறுதிப் போட்டிக்கு தெரிவாகி நிச்சயம் கப் அடிப்போம் என்று வியாஸ்காந்த் துள்ளலோடு பதிலளிக்க, அந்த உற்சாகம் எம்மையும் தொற்றிக்கொண்டது.

அதே உற்சாகத்தோடு, "நன்றி வியாஸ் காந்த். இன்னும் வியாஸ்காந்த், கபில்ராஜ், டினோசன், விஜயராஜ் போன்ற பல தமிழ் வீரர்களை ஸ்ரீலங்கா ஜெர்ஸிசியில் பார்க்க வேண்டும் என்று ஆசையோடும் மிகுந்த எதிர்பார்ப்போடும்  விடை பெறுகிறோம். வீரகேசரி சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்று ஏற்கனவே வாக்களித்தவாறு சரியான நேரத்திற்கு நாம் விடைபெற்றுக்கொள்ள, எமது வாழ்த்தை மகிழ்வோடு ஏற்றுக்கொண்டு  கனவுகள் நிரம்பிய கண்களோடு விடைபெற்றுக்கொண்டார் வியாஸ்காந்த். 

நேர்கண்டவர் - எஸ்.சஜிஷ்ணவன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எம்சிஏ டி பிரிவு 40 ஓவர்...

2025-01-16 20:03:33
news-image

ஐசிசி 19இன் கீழ் மகளிர் ரி20...

2025-01-16 18:13:11
news-image

மகளிர் சர்வதேச ஒருநாள்  கிரிக்கெட்: ப்ரத்திகா,...

2025-01-15 18:24:23
news-image

றினோன் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தின் 'கால்பந்தாட்டம் மூலம்...

2025-01-14 19:24:40
news-image

டிசம்பர் மாதத்தின் அதிசிறந்த ஐசிசி வீரர்...

2025-01-14 18:34:07
news-image

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா...

2025-01-14 17:02:04
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பெத்தும்...

2025-01-14 14:24:06
news-image

வட மாகாணத்தில் மேசைப்பந்தாட்டப் பயிற்சித் திட்டம்

2025-01-14 14:11:23
news-image

19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக்...

2025-01-13 22:15:59
news-image

தனது பதவியை இடைநிறுத்தியதற்கு நியாயம் கோரி...

2025-01-13 15:21:48
news-image

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஆரம்ப...

2025-01-13 10:05:18
news-image

மெல்பேர்ன் டெஸ்டுடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து...

2025-01-13 10:05:39