மீண்டும் உறுத்தும் நினைவுகள்

Published By: J.G.Stephan

07 Dec, 2020 | 04:39 PM
image

-என்.கண்ணன் -
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலிடம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஒரு வேண்டுகோளை முன்வைத்திருக்கிறார். வடக்கு, கிழக்கின் அபிவிருத்தியில் கவனம் செலுத்துவதைப் போன்று, தென்னிலங்கையின் அபிவிருத்தி மீதும் இந்தியா கவனம் செலுத்த வேண்டும், என்பது தான் அது.

வடக்கு, கிழக்கு, மலையகத்தில் இந்தியா 50 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளைக் கட்டிக் கொடுத்திருக்கிறது. அதுபோல, தென்னிலங்கையிலும் வீடமைப்புத் திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என்று பிரதமர் மஹிந்த கோரியிருக்கிறார். சாதாரணமாக, தென்னிலங்கையில் வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோரியிருந்தால், பரவாயில்லை.

வடக்கு, கிழக்கின் மீது காட்டப்படும் அக்கறை போன்று, தெற்கிலும் காட்ட வேண்டும் என்று அவர் முன்வைத்திருக்கின்ற கோரிக்கை தான் சற்று வேறுபட்ட வித்தியாசமானதாக தெரிகிறது. வடக்கு, கிழக்கு தொடர்பாக இந்தியா கையாளும் அணுகுமுறையும், தென்னிலங்கை தொடர்பாக இந்தியா கையாளும் அணுகுமுறையும் நேர்எதிர்மாறானவை.

போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், இலங்கை தொடர்பாக இந்தியாவின் அணுகுமுறை, ஒட்டுமொத்தமாக, இலங்கைக்கு சாதகமானதாகவே இருந்து வந்திருக்கிறது. அதேவேளை, வடக்கு, கிழக்கு, மலையகத்தில் உள்ள தமிழ் மக்களின் நலன்கள் விடயத்தில், கூடுதல் பொறுப்புடனும் அக்கறையுடனும் இருப்பது போலவும் இந்தியா காட்டிக் கொண்டு வருகிறது.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பில் இருப்பதாக, இந்தியா கூறிக் கொண்டாலும், அந்த தீர்வுக்கான நேரடியான முயற்சிகளில் இந்தியா ஒரு போதும் இறங்கவில்லை என்பது தான் உண்மை. அதுபோலவே, தமிழ் மக்களைப் பலப்படுத்தும் வகையிலும் இந்தியா செயற்படவில்லை. ஆனால், தமிழ் மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவது போல, இந்தியா நடந்து கொள்கிறது. வீடமைப்பத் திட்டங்களை முன்னெடுப்பது, அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வது போன்றவற்றில் இந்தியா அக்கறை காட்டி வருகிறது.

இதன் மூலம் தமிழ் மக்களின் நலன்களில் தான் அக்கறையுடனும் பொறுப்புடனும் இருப்பதாக தோற்றப்பாட்டை ஏற்படுத்துகிறது. அதேவேளை, தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளில் இந்தியாவின் பங்கு திருப்திகரமானதாக இல்லை என்பதே தமிழ் மக்களின் நிலைப்பாடு.

தமிழ் மக்களின் நலன்கள் பாதிக்கப்படுகின்ற சூழலில், இந்தியா அதனைக் கண்டும் காணாமல் இருக்கிறது. தனது பொறுப்பை நிறைவேற்ற தவறி விட்டது என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன. அதேவேளை, தென்னிலங்கையுடனான, ஊடாடல் என்பது இதற்கு எதிர்மாறானது.

இலங்கை அரசாங்கத்துக்கு இந்தியா ஆதரவாக இருக்கிறது. அரசியல் ரீதியான ஒத்துழைப்புகளை வழங்குகிறது. தமிழ் மக்களின் பிரச்சினை விடயங்களில், முன்னைய அரசாங்கங்களுக்கு இந்தியா தரப்பில் கொடுக்கப்பட்டதைப் போன்ற அழுத்தங்கள் கூட இப்போது கொடுக்கப்படுவதில்லை. கொழும்புடனான இந்தியாவின் நட்பும், உறவும் இலங்கைக்கு சாதகமானதாகவே முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கிறது. எனினும்,  தென்னிலங்கையில் இந்தியாவினால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மிகவும் குறைவு

அங்கு அபிவிருத்தித் திட்டங்களையோ, உதவித் திட்டங்களையோ இந்தியா அதிகளவில் மேற்கொள்ளவில்லை. எனினும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பல அபிவிருத்தித் திட்டங்களுக்கு இந்தியா உதவி அளித்திருக்கிறது. இவ்வாறான நிலையில் தான், தெற்கிலும் இந்தியா வீடமைப்புத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறார் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ. இந்தக் கோரிக்கையின் ஊடாக, அவர் தென்னிலங்கையின் அபிவிருத்திக்கான பங்காளியாக, இந்தியா மாற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

போர் முடிவுக்கு வந்த பின்னர், தென்பகுதியை சீனாவும், வடக்கு,கிழக்கை இந்தியாவும் தான் தத்தெடுடுத்து, அபிவிருத்தி செய்வதில் பங்களிப்புச் செய்திருந்தன. இந்தியாவின் உதவி கிடைத்திருக்காவிட்டால் போரால் பாதிக்கப்பட்ட மக்களில் பல ஆயிரம் பேர் இப்போதும், தற்காலிக கொட்டில்களுக்குள் தான் வாழ்ந்து கொண்டிருந்திருப்பார்கள்.

அதுபோல, இந்தியாவின் உதவி கிடைத்திருக்காவிட்டால், வடக்கிற்கான ரயில் பாதை அமைப்பதில் பல ஆண்டுகள் தாமதம் ஏற்பட்டிருக்கலாம். இதுபோன்று பல திட்டங்களை இந்தியா வடக்கிற்கு செய்து கொடுத்திருக்கிறது. இந்தியாவின் திட்டங்கள் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழக்கைத் தரத்தை மேம்படுத்தும் உட்கட்டமைப்புத் திட்டங்களாகவே இருந்தன. ஆனால், மறுபுறத்தில் சீனா, உட்கட்டமைப்பு திட்டங்களை விட, அபிவிருத்தித் திட்டங்களுக்கு உதவுவதில் தான் கூடுதல் அக்கறை செலுத்தியது.

அபிவிருத்திக்கான கடன்களையும் உதவிகளையும் வழங்கியது. அதன் மூலம் தென்பகுதி தொழில் வளர்ச்சியையும் பொருளாதார வளர்ச்சியையும் காணக் கூடியதாக இருந்தது. ஒரு வகையில் இலங்கையைக் கடனாளி ஆக்கியது கூட சீனாவின் இந்த உதவிகள், திட்டங்கள் தான். ஆனால், இலங்கை கடன் பொறியில் சிக்கியதற்கு தாங்கள் காரணமில்லை என்றும், இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன்களில் சுமார் 8 சதவீதம் மட்டுமே தங்களால் கொடுக்கப்பட்டது என்றும் கூறுகிறது சீனா. அதுபோலவே, நாட்டின் அபிவிருத்திக்கு  சீனா உதவியது என்றும், இலங்கையை கடன்பொறியில் சிக்க வைக்கவில்லை என்றும் சான்றிதழ் கொடுத்திருக்கிறார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

அண்மையில் பாரா ளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் பந்துல குணவர்த்தன, வடக்கு,கிழக்கை அபிவிருத்தி செய்வதற்காக பெறப்பட்ட கடன்களால் தான், நாடு கடன்பொறியில் சி்க்கியது என்று கூறியிருந்தார். அவரது இந்தக் கருத்து மிகவும் மோசமானது. ஏனென்றால், போருக்குப் பின்னர், வடக்கு,கிழக்கை அபிவிருத்தி செய்வதற்காக இந்தியா உதவியது. மேற்குலக நாடுகள் அமைப்புகள் உதவின. சர்வதேச அமைப்புகள் கொடைகளையும் உதவிகளையும் வழங்கின. இந்த உதவிகள் அனைத்துமே உட்கட்டமைப்பு சார்ந்த திட்டங்களாக இருந்தனவே தவிர, பாரிய அபிவிருத்தித் திட்டங்களாக இருக்கவில்லை.

அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தல விமான நிலையம் போன்ற ஏராளமான அபிவிருத்தித் திட்டங்கள் கடந்த 10 ஆண்டுகளில் தென்பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அவ்வாறான ஒரு அபிவிருத்தித் திட்டம் கூட இதுவரை வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படவில்லை. பாரிய முதலீட்டுத் திட்டங்களில் ஒன்றைக் கூட வடக்கு, கிழக்கிற்காக ஒதுக்கத் தயாராக இல்லாத அரசாங்கம், வடக்கு, கிழக்கிற்கு வழங்கப்பட்டது போன்ற வீடமைப்பு உதவிகளை வழங்க வேண்டும் என்று இந்தியாவிடம் கோரிக்கை விடுத்திருக்கிறது.

இந்தக் கோரிக்கையும், அதற்கான இந்தியாவின் பதில்களும் என்னவென்பது முக்கியமில்லை. அந்த கோரிக்கை விடுக்கப்பட்ட முறை தான் நெருடலானது. போர் முடிவுக்கு வந்த பின்னர், வடக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வந்த அமைப்புகள், நாடுகள் விடயத்தில் அரசாங்கம் எந்தளவுக்கு கடும் போக்குடன் நடந்து கொண்டிருந்தது என்பதை பலரும் மறந்து போயிருக்கலாம்.

சிங்களக் குடியேற்றப் பகுதிகளுக்கும் ஒரு பகுதியை கொடுத்தால் தான், வடக்கில் உதவிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படும் என்ற நிலை அப்போது காணப்பட்டது. வவுனியாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உழவு இயந்திரங்களை வழங்குவதற்காக சென்றிருந்த  சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வதிவிடப் பிரதிநிதி, அவற்றில் ஒரு பகுதியை வெலிஓயாவில் உள்ள சிங்கள மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று கொடுக்கப்பட்ட அழுத்தங்களினால், ஓரமாகச் சென்று கண்ணீர் விட்டு அழுத சம்பவமும் அப்போது நடந்தது. வடக்கை அபிவிருத்தி செய்தோம் என்று கூறும் அரசாங்கம், அந்த அபிவிருத்திக்கான உதவிகளில் கணிசமானவற்றை ஏனைய பகுதிகளுக்கு திட்டமிட்டு,திசை திருப்பியது.

இப்போது கூட இந்தியாவிடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்திருக்கின்ற வேண்டுகோள் கூட, வடக்கைப் போன்று, தெற்கையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று, கூறுவதைப் போலவே அமைந்திருக்கிறது. இது போர் முடிந்த பின்னர், வடக்கிற்கான உதவிகள் பறித்தெடுக்கப்பட்டதையே நினைவுபடுத்துகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48