-சதீஷ் கிருஷ்ணபிள்ளை -
கொவிட்-19 தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தாயிற்று. மூன்று மருந்துகள் நம்பிக்கை தருகின்றன. 

பைஸர் (Pfizer) நிறுவனமும், பயோ-என்-டெக் (BioNTec) நிறுவனமும் தயாரித்த தடுப்பு மருந்தை பிரிட்டன் அங்கீகரித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மொடர்னா நிறுவனம் தயாரித்த தடுப்பு மருந்திற்கு அங்கீகாரம் கிடைத்தால், அதனை எதிர்வரும் 21ஆம் திகதி அளவில் கொடுக்கலாம். 

அடுத்து ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, அஸ்ட்ராஸெனக்கா (AstraZeneca) நிறுவனம் தயாரித்த தடுப்பு மருந்து. அதன் செயற்றிறன் பற்றி தெளிவற்ற அறிக்கைகளே வருகிறன்றன. உலகெங்கிலும் தொற்றுக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. மரணங்களின் எண்ணிக்கை ஒன்றரை இலட்சத்தைத் தாண்டுகிறது. எல்லா நாடுகளுக்கும் தடுப்பு மருந்து தேவை. பல நாடுகள் தடுப்பு மருந்து வாங்குவதற்கு பதிவு செய்துள்ளன. சில நாடுகள் காசு கட்டியுள்ளன. 

தடுப்பு மருந்துக்கு அளவுக்கு அதிகமான கேள்வி. ஆரம்பகட்டத்தில் அந்தளவு மருந்தை உற்பத்தி செய்ய முடியாது. உள்ளதை வைத்து தான் விநியோகிக்க வேண்டும் அல்லது‘விற்க’ வேண்டும். இது இனிப்புப் பண்டம் அல்ல. விரும்பியவர்க்கு கூடுதலாக கொடுத்து விரும்பாதவரைப் புறக்கணித்து விடுவதற்கு. உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சினை. இதில் விஞ்ஞானம் உண்டு. மனிதகுலத்தின் நன்மைக்காக நெறிமுறையைப் பேண வேண்டிய அவசியமும் இருக்கிறது. 

முதலாளித்துவம் கோலோச்சும் அரசியல், வணிக நிர்வாகக் கட்டமைப்புக்களில் இவை இரண்டுமே கிடையாது. பெருமுதலைகள் இலாபம் சம்பாதிக்கும் நோக்கத்தைத் தவிர. 

உலகம் முழுவதும் தடுப்புமருந்தை சமமாகப் பகிர்வதால் பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது. விஞ்ஞான ரீதியில், எங்கு அதிகமாக தடுப்புமருந்து தேவைப்படுகிறதோ, அந்த இடத்திற்கு கூடுதலான தடுப்பு மருந்து கூடுதலாக வழங்கப்பட வேண்டும். அதுவே நியாயமான, பாரபட்சமற்றதாக, விஞ்ஞானத்திற்கும், நெறிமுறைகளுக்கும் உட்பட்ட விநியோக நடைமுறையாக இருக்கும். 

பெருந்தொற்றுக்கான தடுப்புமருந்து இரு நோக்கங்கள் கொண்டது. ஒரு தனிநபருக்கு எதிர்காலத்தில் தொற்று ஏற்படாமல் தடுப்பது முதல் நோக்கம். அது நேரிடையானது. ஒருவருக்கு தடுப்பு மருந்து வழங்குவதன் மூலம், அவரால் மற்றவருக்கு (தடுப்பு மருந்து கிடைக்காதவர் அடங்கலாக) தொற்று ஏற்படாமல் செய்து, சமூகத்தைப் பாதுகாப்பது மற்றைய நோக்கம். இது மறைமுகமானது. 

ஒரு சமூகத்தில் போதியளவு தனிநபர்கள் தொற்று பரவாத அளவிற்கு நோய் எதிர்ப்பு சக்தி மிக்கவர்களாக இருந்தால், அந்த சமூகமே எதிர்ப்பு சக்தி  கொண்டதாக இருக்கும். 

இது தடுப்புமருந்து விநியோகம் சார்ந்த நெறிமுறையை கேள்விக்கு உட்படுத்துகிறது. எட்டு வயது பாடசாலை மாணவன். எண்பது வயது முதியவர். முதலில் யாருக்கு கொடுப்பீர்கள் என்று கேட்டால், அந்தக் கேள்வி சிக்கலானது. கொவிட்-19 கூடுதலாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதும், பலியாவதும் முதியவர்கள் தான். 

ஆனால், பிள்ளைகள் காவிகளாக இருக்கிறார்கள். ஒரு பிள்ளையின் மூலம் பாடசாலையில் கூடுதலானோர் மத்தியில் கிருமி பரவலாம். 

எனவே, யாருக்கு முதலில் தடுப்பு மருந்தேற்றுவது என்பதை இலகுவில் தீர்மானிக்க முடியாது. இதை சமூகத் தேவைகளின் அடிப்படையில் தீர்மானிப்பது அவசியமாக இருக்கும். இந்தத் தேவைகள் சமூகத்திற்கு சமூகம் மாறுபடலாம்.

நியாயமாக விநியோகித்தலும் சவாலானதே. உதாரணமாக ஆஸ்பத்திரி வென்ரிலேற்றர். பல நோயாளிகள் இருக்கையில், ஒரு வென்ரிலேற்றரை யாருக்கு முதலில் ஒதுக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது என்போம். 

ஒரு நேர்மையான சமூகத்தில், மருத்துவமனையில் இருந்து வெளியேறியதும் உயிர் பிழைத்து கூடுதலான உயிர்களை காக்கக் கூடியவர் முன்னுரிமை சலுகையைப் பெறுவார். இதைப் போல், எவர் மூலம் கூடுதலாக வைரஸ் பரவக்கூடிய சாத்தியம் அதிகமோ, அவருக்கு முதலில் தடுப்பு மருந்தை வழங்குவதன்மூலம் சமூகத்திற்கு ஏற்படக்கூடிய பலாபலன்கள் அதிகமாக இருக்கும். 

இதுவும் கூட ஒவ்வொரு சமூகத்தினதும் வாழ்வியல் ஒழுக்க விழுமியங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டிய விடயம் தான். 

பிரிட்டன் ஒழுங்குமுறையை அவதானித்தால் தெரியும். அங்கு முதியோர் இல்லங்களில் உள்ளவர்கள், அவர்களைப் பராமரிப்பவர்களுக்கு அடுத்தபடியாக, களத்தில் இறங்கி வேலை செய்யும் சுகாதார பணியாளர்களுக்கும், சமூக தொண்டர்களுக்கும் தான் ஒழுங்குமுறையின் அடிப்படையில் தடுப்பு மருந்து வழங்கப்படும்.

மருந்து விநியோகத்தில நியாயத்தன்மை பேணுதல் சமநீதி சம்பந்தமான விடயமாகவும்  இருக்கிறது. ஒருபுறத்தில் நீரிழிவு, ஆஸ்த்துமா, இருதயக் கோளாறு போன்ற ஏதேனும் நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர். மறுபுறத்தில், கொவிட் அறிகுறிகள் மிகவும் தீவிரமான நிலையில் உள்ளவரும் இருந்தால், யாருக்கு முதலில் மருந்து வழங்குவது? 

இந்த இடத்தில் யாருக்கு மருந்து வழங்குவதால் சமூகத்திற்கு கூடுதல் நன்மை என்பதை மாத்திரம் பார்க்க முடியாது. சுகாதாரத்துறை ஏற்றத்தாழ்வுகள் தாண்டி சமவாய்ப்புக்களை வழங்குதல் என்பதிலும் சமநீதி தங்கியுள்ளது. இங்கு சிலவேளை குலுக்கல் முறையில் பயனாளியை தெரிவு செய்யவும் நேரிடும்.

ஒரு கிராமத்தில், நகரத்தில், மாநிலத்தில், நாட்டில், ஏன் உலகத்தில் நெறிமுறை சார்ந்து தடுப்புமருந்தை விநியோகிக்க சரியான கட்டமைப்பு அவசியம். 

கட்டற்ற ரீதியில் வைரஸ் பரவும் கட்டமைப்புக்களையும் சமூகங்களையும், தொற்று ஏற்பட்டால் ஆகக்கூடுதலாக பாதிக்கப்படக்கூடிய சமூகங்களையும் இனங்கண்டு, பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள சமூகங்களை வரிசைப்படுத்தி வைத்து, மருந்தை விநியோகிக்கலாம். 

உதாரணமாக, ஆகக்கூடுதலான சனநெரிசல் மிக்க சமூகங்கள், கொவிட்-19 நெருக்கடியால் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. இங்கு தொற்று அபாயம் அதிகம். கூடுதலான மரணங்களும் நிகழ்கின்றன. எந்த சமூகத்திற்கு முதலில் தடுப்பு மருந்தை வழங்க வேண்டும் என நாடொன்று முன்கூட்டியே தீர்மானித்து வைத்திருக்குமாயின், நியாயமான விநியோகத்தை உறுதிப்படுத்தலாம்.

தடுப்புமருந்து விநியோகத்தில் தொழில்நுட்ப ரீதியான காரணங்கள் உள்ளன. உதாரணமாக, பைஸர் நிறுவனத்தின் மருந்தை வறிய நாடுகளில் விநியோகிக்க முடியாது. அதனை அசாதாரணமாக (-80 செல்சியஸ்) குளிரூட்டிய நிலைமைகளில் சேமிக்கும் வசதி வறிய நாடுகளுக்கு இருக்காது. ரஷ்யா தயாரித்த ஸ்புட்னிக்-5 என்ற தடுப்பு மருந்தை சாதாரண குளிரூட்டியில் வைக்கலாம். 

இரு தடுப்புமருந்துகள் இருக்கின்றன. அவை தேவைப்படும் கோடிக்கணக்கானவர்கள் உள்ளனர். பைஸர் நிறுவனமும், ரஷ்யாவும் ஒருங்கிணைந்து நியாயமான முறையில் மருந்தை விநியோகிக்கக்கூடிய சட்டரீதியான, வணிகரீதியான, நெறிமுறை சார்ந்த ஒழுங்கு உள்ளதா? அல்லது, அத்தகைய ஒழுங்குமுறையொன்றை வகுத்து, அமுலாக்கும் ஆற்றல் உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு இருக்கிறதா? அது தான் இல்லை.

தடுப்புமருந்து விநியோகத்தில் கடைப்பிடிக்க அல்லது கவனத்திற்கொள்ள வேண்டிய விடயங்களை ஆராய்ந்தோம். இவை சிறந்த ஆட்சி நிர்வாகக் கட்டமைப்புக்கள் அடிப்படை ஒழுக்க விழுமியக் கோட்பாடுகள் அனுசரிக்கப்படும் நாடுகளுக்கோ, சமூகங்களுக்கோ பொருத்தமானவையாக இருக்கலாம். இன்றைய உலகிற்கு இத்தகைய பொதுவானதொரு ஒழுங்குமுறை இல்லை. அதற்கு பதிலாக வியாபார நலன்கள் முன்னிலைப்படுத்தப்படும் சுயநலமே கோலோச்சுகிறது.

அராஜகம் தலைவிரித்தாடி, எதேச்சாதிகாரம் கோலோச்சும் நாடுகளை எடுத்துக் கொள்வோம். அந்நாடுகளில் சட்டமும், மனித விழுமியங்களும் பொருட்டாக மதிக்கப்பட மாட்டா. அத்தகைய நாடுகளுக்கு எப்படியோ தடுப்பு மருந்து கிடைப்பதாக வைத்துக் கொள்வோம். 

அங்கு சமநீதியின் அடிப்படையில் யாருக்கு முதலில் வழங்கினால் சமூகத்திற்கு கூடுதல் நன்மை என்றெல்லாம் சிந்திக்கும் அரசியல்வாதிகள் இல்லை. அவர்களது அரசியல் அதிகாரங்களைத் தாண்டிய ஒழுங்குமுறைகளும் கிடையாது.

மாறாக, கிடைத்த மருந்துகளை பறித்துக் கொண்டு தமக்கும் தம்மைச் சார்ந்தவர்களுக்கும் ஏற்றிக் கொள்ளக்கூடிய மக்கள் பிரதிநிதிகளே இருப்பார்கள். 

இவை போன்ற நாடுகளில் நியாயமான, பாரபட்சமற்ற விநியோகம் என்பதெல்லாம் வெறும் கனவே. இங்கெல்லாம் தடுப்பு மருந்தை சாபவிமோசமாக பார்ப்பது முட்டாள்தனமே.