(க.கிஷாந்தன்)

அட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட நோர்வூட் நிவ்வெளி தமிழ் வித்தியாலயம், அயரபி தமிழ் வித்தியாலயம் ஆகியவற்றுக்கு இன்று (07.12.2020) வருகை தந்த மாணவர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பட்டுள்ளனர்.

மாணவர்களின் வருகை வெகுவாக குறைந்திருந்ததாலும், வருகை தந்திருந்த மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை கருத்திற் கொண்டே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டது என பாடசாலைகளின் அதிபர்கள் தெரிவித்தனர். 

நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் கடமையாற்றிய ஆசிரியை ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த ஆசிரியர்களும், மாணவர்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் பாடசாலையும் மூடப்பட்டுள்ளது.

இதனால் நோர்வூட் பகுதியில் உள்ள ஏனைய பாடசாலைக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 90 வீதத்தால் குறைவடைந்துள்ளது. ஒரு சிலரே பாடசாலைக்கு வந்துள்ளனர்.

இந்நிலையிலேயே, அவர்கள் திருப்பி அனுப்பட்டுள்ளனர். நோர்வூட் தமிழ் மகா வித்யாலய பாடசாலை வளாகம் மற்றும் நோர்வூட் நகரம் தொற்றுநீக்கம் செய்யப்பட்டது.

இதற்கான நடவடிக்கையை நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் ரவி குழந்தைவேலு தலைமையிலான குழுவினர் முன்னெடுத்தனர்.