- குடந்தையான் -
நிவர் மற்றும் புரெவி புயல் தாக்கம் காரணமாக தமிழகம் பாதிக்கப்பட்டாலும், அரசியல் ரீதியாக பல்வேறு நகர்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஆளும் கட்சியான அ.தி.மு.க. பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு இருக்கிறது. கூட்டணியில் பா.ஜ.க.வை இணைத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் இருந்தாலும், எத்தனை தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதனை அ.தி.மு.க. தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள விரும்புகிறது. 

அதேபோல் மற்றொரு கூட்டணி கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி, கூடுதல் இடங்களை கேட்பதற்கான முயற்சியில், ‘வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, டிசம்பர் மாதம் முதல் திகதியிலிருந்து தமிழக அரசு தேர்வாணைய அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை’ தொடங்கியிருக்கிறது. 

இது அக்கட்சி தன்னுடைய வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்வதற்கான அரசியல் ரீதியான போராட்டம் என்றாலும், அந்தக் கட்சி அ.தி.மு.க. கூட்டணியில் நீடிக்கவும், துணைமுதல்வர் பதவி மற்றும் 40 தொகுதிகளை கேட்பதற்கான முயற்சி என்றும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரியவருவதால், என்ன செய்வது என்று தெரியாமல் அ.தி.மு.க.வின் தலைமை திணறி வருகிறது.

அதேதருணத்தில் சசிகலாவின் விடுதலையையும் அ.தி.மு.க. விரும்பவில்லை. இதனை முதல்வர் எடப்பாடி, மத்தியஅரசின் இயங்கு சக்திகளான ‘அமித்ஷா, மோடி, ப்யுஸ் கோயல்’ உள்ளிட்ட மூவரிடமும் தெரிவித்திருக்கிறார். இதனால் சசிகலா சிறையிலிருந்து வெளிவருவதற்கான வாய்ப்பு குறைவு என்று அ.தி.மு.க. தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் எடப்பாடிக்கு எதிராக, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர்களான வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் மறைமுகமாக கூட்டணி அமைத்து அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பிர்களை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். 

தேர்தலில்  இவர்கள் ஏதேனும் உள்ளடி வேலைகளில் ஈடுபடக்கூடும் என்றும், அதனால் இவர்களை எம்மாதிரியாக கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டுமென தெரியாது முதல்வர் எடப்பாடி நெருக்கடியில் உள்ளார்.

பா.ஜ.க.வின் வலிமையான பீடமாக திகழும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் உளவுத்துறையினர், தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவதற்கான சாத்தியம் அதிகம் என்றும், அக்கட்சியின் வெற்றியை சிதறடிக்க ஏதேனும் மாற்று பயங்களை உபாயங்களை கண்டறிய வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார்கள். 

அதில் ஒன்றுதான் தி.மு.க.வின் அதிருப்தியாளர்களை ஒன்றிணைக்கும் சக்திக் கொண்ட மு.க.அழகிரியை தனிக்கட்சி தொடங்கி வைப்பது அல்லது பா.ஜ.க.வில் இணைய வைப்பது. மற்றொன்று ரஜினியை புதிய கட்சியை தொடங்கி வைப்பது. இவ்விரண்டு விடயங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றால் மட்டுமே, தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பை பறிக்க இயலும் என பரிந்துரைத்திருக்கிறார்கள்.

இதன் பின்னணியில் தான் பா.ஜ.க.வின் அழுத்தம் கொடுத்து, தமிழக தலைவர்களில் ஒருவரான ஆடிட்டர் குருமூர்த்தி, ரஜினிகாந்த்தை அண்மையில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அதன் பிறகு தான் ரஜினிகாந்த் தன்னுடைய மக்கள் மன்ற நிர்வாகிகளையும், மாவட்ட செயலாளர்களையும் நவம்பர் 30 ஆம் திகதியன்று சந்திக்கும் திட்டம் தயாரானது என்கிறார்கள் விடயமறிந்தவர்கள். 

இதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து இருக்கிறார். இந்த சந்திப்பின் மூலம் அவர் மீண்டும் அரசியலுக்கு வரக் கூடும் என்றும், புதிதாக அரசியல் கட்சி தொடங்க கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. தி.மு.க. தரப்பும், அ.தி.மு.க. தரப்புக்கள் உசார் அடைந்ததோடு ரஜினியின் அசைவை அவதானிக்கத் தொடங்கியுள்ளன.

 ஆனால் நிர்வாகிகளின் சந்திப்பின்போது என்ன நடைபெற்றது? எம்மாதிரியான ஆலோசனை நடைபெற்றது? என அக்கூட்டத்தில் பங்குபற்றிய பெயர் வெளியிட விரும்பாத மாவட்ட நிர்வாகிகள் சிலர் பேசுகையில்,‘ரஜினிகாந்த்திற்கு அரசியலுக்கு வர விருப்பம் இருக்கிறது. ஆனால் அவருடைய உடல்நிலை முழுமையான ஒத்துழைப்பை வழங்கவில்லை. மருத்துவர்கள், உறவினர்கள், நண்பர்கள் ,குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர்கள் ஒருமித்த குரலில் மக்களை சந்திக்க வேண்டாம் என்று ரஜினியிடம் அறிவுறுத்தி இருக்கிறார்கள். 

அதேதருணத்தில் கொரோனா நோய்தொற்று குறித்த அச்சம் அவருக்கு அதிகம் இருக்கிறது. நாங்கள் மக்களை நேரடியாக சந்திக்காமல், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினைப் போல் ‘இணையம் ’வழியாகவே மக்களை சந்திக்கலாம் என ஆலோசனை வழங்கினோம். அதற்கு அவர் மக்கள் என்னை சந்திக்க விரும்புகிறார்கள். ஆகவே அவர்களை சந்திப்பது தான் நல்லது. அது நடைபெறவில்லை என்றால் வெற்றி பெற இயலாதென யதார்த்தமான விடயங்களை பகிர்ந்து கொண்டார்.

அவரிடம் நாங்கள் வேறு ஏதேனும் அரசியல் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க விரும்புகிறீர்களா? அல்லது இணைந்து பணியாற்ற வேண்டுமா? என கேட்ட போது, ‘ அ.தி.மு.க. கூட்டணிக்கோ அல்லது தி.மு.க. கூட்டணிக்கோ ஆதரவு இல்லை என்றும், பா.ஜ.க. விற்கு ஆதரவு தெரிவித்தால் நம்முடைய மக்கள் மன்றத்தில் உள்ள தலித் மற்றும் சிறுபான்மையின ரசிகர்களும், நிர்வாகிகளும் ஏற்கமாட்டார்களென தெளிவாக தெரிவித்தார். 

அதனால் எத்தகைய முடிவுகளை நீங்கள் மேற்கொண்டாலும் உங்களின் முடிவுகளுக்கு கட்டுகிறோமென தெரிவித்தோம். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். அத்துடன் அவர் மக்கள் நல திட்டங்களை நான் எதிர்பார்த்த அளவிற்கு நீங்கள் செயலாற்றவில்லை என்ற அதிருப்தியையும் வெளிப்படுத்தினார். 

அதற்கு நாங்கள் சில விளக்கங்களையும், நடைமுறையில் நடைபெற்ற சில விடயங்களை எடுத்துக் கூறினோம். இருந்தாலும் அவர் நான் மக்கள் நலனுக்காகவே அரசியலில் ஈடுபடவிருக்கிறேன். எம்முடைய நோக்கத்தை சிதைத்து விடாதீர்களென கேட்டுக் கொண்டார். அதனால் அவர் தற்போதும் ‘புதிரை’ வைத்து தான் கூட்டத்தை நிறைவு செய்திருக்கிறார்’ என்றனர்.  

இருப்பினும் ‘ஆன்மீக ஜனதா கட்சி’ என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யவிருப்பதாக ரஜினிக்கு நெருக்கமானவர்கள் ஒரு தகவலை கசிய விட்டிருக்கிறார்கள். இது எவ்வளவு தூரம் உண்மை என்பது ரஜினியின் பிறந்தநாளன்றோ அல்லது அடுத்த மாதமோ தெரியவரும் என நிர்வாகிகள் சிலர் தெரிவித்திருக்கிறார்கள். 

வேறொரு தரப்பினர், ரஜினி ஏதேனும் ஒரு கூட்டணியில் இடம்பெற்று இருபது இடங்களில் போட்டியிட்டு வெற்றிப் பெறுவோம் என்று சொல்லியபோது, அதனால் வேறு வகையினதான நெருக்கடிகள் உருவாகும். அதனால் இந்த ஆலோசனை வேண்டாம்’ என்று ரஜினியே நிராகரித்திருப்பதாக கூறுகின்றார்கள்

ரஜினிகாந்தின் நடவடிக்கைகள் மற்றும் அவரது செயல்பாடுகளை தொடர்ந்து உற்று அவதானிக்கும் சிலர், ‘ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட்டவுடன், வெற்றிப் பெற்று, அதிகாரத்தை கைப்பற்றுவது குறித்து மட்டுமே சிந்திக்கிறார் என்றும், அவர் ஒரு வேளை தோல்வியடைந்தால்.. எதிர்கட்சியாக மக்கள் நல பணிகளை தொடர்ந்து மேற்கொள்வதில் தயக்கம் காட்டுவார் போல் தெரிகிறது என்றும் கூறுகின்றனர்.

அதுமட்டுமன்றி ரஜினி, அரசியலை வெற்றியுடன் மட்டுமே இணைத்து பார்க்கிறார் என்றும், அரசியல் என்பது தேர்தல் வெற்றியுடன் முடிவடைவதல்ல என்பதையும், அது ஒரு தொடர் மக்கள் நல செயல்பாடு என்பதையும் அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை’ என்றும் தெரிவிக்கிறார்கள். அரசியலில் வெற்றிப் பெற்ற எம்.ஜி.ஆர், என்.டி.ஆர். போன்றவர்களை மட்டுமே அவர் பின்பற்றுவதாகவும், அது தற்போது நடைமுறைச் சாத்தியமில்லை என்பதை உணரவில்லையோ என்றும் கருதுகிறார்கள்.

இந்நிலையில் தமிழக வாக்காளர்கள் ரஜினியிடம் எதிர்பார்ப்பது என்ன? என்பதும், தமிழக வாக்காளர்களுக்கு ரஜினி என்ன சொல்ல வருகிறார் என்பதும் புரியாத புதிராகவே இன்றும் தொடர்கிறது என்பது மட்டுமே உண்மை.