- சிவலிங்கம் சிவகுமாரன் - 

பொலிஸாரின் மீதுள்ள முறைப்பாடுகள் விசாரிக்கப்பட வேண்டியது முக்கியமானதாகும். ஏனெனில் படையினரை விட பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் சிவில் நிர்வாக பிரிவினராகவே பொலிஸார் விளங்குகின்றனர். 

கொரோனாவின் இரண்டாது அலை பரவி வந்த சந்தர்ப்பத்தில் மலையகத்தின் ஒரு பிரதான நகரம் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவினால் அறிவிக்கப்பட்டது. அதையடுத்து வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இராணுவத்தினர் நகரை சுற்றி வலம்  வந்தனர். நான்கு நாட்களுக்குப்பின்னர் சகஜ நிலைமை திரும்பியவுடன் வர்த்தக நிலையங்களை திறக்கலாமா வேண்டாமா என உள்ளூராட்சி சபைத் தலைவர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரை வினவிய போது , நகரை மூடச்சொல்லி நாம் உத்தரவிடவில்லையே? மேலும் குறித்த நகரை மூடும்படியோ திறக்கச்சொல்லியோ எமக்கு இது வரை எமது தலைமை அதிகாரியிடமிருந்து எந்த பணிப்புரைகளும் வரவில்லை, எனவே இந்த விடயத்தில் நாம் கருத்துக்கள் எதையும் கூற முடியாது ' என கை விரித்து விட்டார்.  

அதாவது இராணுவத்தளபதியின் உத்தரவு பொலிஸாருக்கு செல்லாது என்பது மட்டுமல்ல அதன் அர்த்தம். அவர்கள் சொற்படி நாம் எப்படி கேட்பது என்ற கௌரவ பிரச்சினையும் அதில் அடங்கியுள்ளது. ஆனால் கடந்த வாரத்தோடு பொலிஸாரின் அதிகாரமும் கிட்டத்தட்ட படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்று தான் கூற வேண்டியுள்ளது. 

பொலிஸ் திணைக்களத்தை இயக்கும் பொது பாதுகாப்பு என்ற அமைச்சுப் பொறுப்பு ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை பொலிஸ் துறையினர் எந்தளவுக்கு ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பது தெரியவில்லை. 

இந்த நாட்டில் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் பாதுகாப்பு செயலாளராக இருக்க முடியும் என்றால் அவர்  ஜனாதிபதியாகவும் தெரிவு செய்ய முடியுமென்றால் அவரால் ஏன் இராணுவ அதிகாரிகளை மீண்டும் அமைச்சு செயலாளர்களாகவும்  அமைச்சர்களாகவும் நியமிக்க முடியாது?  

முக்கியமான பொறுப்புகளுக்கும் இராணுவ அதிகாரிகளை நியமிக்கும் எண்ணக்கரு மஹிந்த ஆட்சி காலத்திலேயே விதைக்கப்பட்டு  விட்டது. போர் முடிவுற்றவுடன் வடமாகாண ஆளுநராக மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி நியமிக்கப்பட்டதையும் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் பிரதி வதிவிடப்பிரதிநிதியாக தற்போதைய இராணுவத்தளபதி சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டதையும் நாம் மறப்பதற்கு இல்லை.

ஜனாதிபதி  வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டவுடன் நாட்டை இராணுவ அதிகாரிக்கு கொடுத்து விடாதீர்கள் என எதிர்க் கட்சியினரும் புலம்பெயர் தமிழர்களும் பரப்புரைகளை முன்னெடுத்தனர்.  அவரே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவுடன்   சர்வாதிகார ஆட்சி மலரப்போகின்றது என மேற்குறிப்பிட்ட இரு தரப்பினருமே அழுத்தி கூறினர். 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , சில முக்கிய பொறுப்புகளை ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கிய சந்தர்ப்பத்தில்  நாம் கூறியது நடக்கத்தொடங்கி விட்டது எனக் கூறினர். பாராளுமன்றத் தேர்தல் முடிவுற்று ஜனாதிபதி போட்டியிட்ட பொதுஜன பெரமுன கட்சி, மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெற்றவுடன் இனி அவர்களின் இஷ்டப்படியே எல்லாம் நடக்கும் என எதிர்த்தரப்பால் கூறப்பட்டது.

20ஆவது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டவுடன் இனி அவர்களின் யுகம் ஆரம்பிக்கப்பட்டு விட்டது என அயர்ந்து போய் உட்கார்ந்து விட்டனர் எதிர்த்தரப்பினர். அவர்களின் குரல்கள் பாராளுமன்றத்துக்கு வெளியே எங்கேயும் எடுபடவில்லை. கொரோனா இரண்டாவது அலை பரவலின் பின்னர் சகல பொறுப்புகளையும் ஜனாதிபதி கோட்டாபய இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவிடமே ஒப்படைத்திருந்தார். 

நாட்டின் எந்த பகுதி தனிமைப்படுத்தப்படுகின்றது, ஊரடங்கு பிறப்பிக்கப்படுகின்றது என்பதிலிருந்து அது தளர்த்தப்படுவது எப்போது ,போக்குவரத்து செயற்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும், சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை எவ்வாறு கையாள வேண்டும் போன்ற சகல விடயங்களையும் இராணுவத் தளபதியே அறிவித்து வந்தார். 

இராணுவத் தளபதிக்கு இவ்வாறான உத்தரவுகளைப் பிறப்பிப்பதற்கு என்ன சட்ட அங்கீகாரம் உள்ளது என ஜனாதிபதி சட்டத்தரணியும் எம்.பியுமான சுமந்திரன் பாராளுமன்றில் கேள்வி எழுப்பியதையும் இங்கு மறக்க முடியாது. 

இது இவ்வாறிருக்கவே பொது பாதுகாப்பு அமைச்சு ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவிற்கு வழங்கப்பட்டுள்ளது. தனது அமைச்சுப் பொறுப்பை ஏற்றவுடன் தனது வழமையான பாணியில் பொலிஸ் துறையை சுத்தப்படுத்த போவதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். 

80 ஆயிரமாக இருக்கும் பொலிஸாரின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக  உயர்த்தி நாட்டில் இடம்பெறும் குற்றச்சம்பவங்களுக்கு எதிராக போராடப்போவதாக அவர் கூறுகிறார். மேலும் பொலிஸாரின் 10 சதவீதமானோரே ஊழல்களுடனும் குற்றச்சம்பவங்களுடனும் தொடர்புபற்றிருக்கின்றனர் என்றும், மிகுதியான 90 வீதமானோர் நேர்மையாக தமது கடமையை முன்னெடுப்பவர்கள் என்றும் அவர் கூறியுள்ளமை முக்கிய விடயம். 

பொலிஸாரின் மீதுள்ள முறைப்பாடுகள் விசாரிக்கப்பட வேண்டியது முக்கியமானதாகும். ஏனெனில் படையினரை விட பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் சிவில் நிர்வாக பிரிவினராகவே பொலிஸார் விளங்குகின்றனர். 

இவர்கள் மக்களிடம் மிக நெருக்கமாகவும் அருகாமையிலும் இருந்து அவர்களுக்கு பாதுகாப்பை வழங்கும் தரப்பினராக விளங்குகின்றனர். எனினும் இனி இவர்களை கையாளப்போவது என்னவோ ஒரு ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி எனும் போது அது அவர்களை மனரீதியாக எவ்வாறு தயார்ப்படுத்தப்போகின்றது என்பது தெரியவில்லை. 

பொதுவாகவே எமது நாட்டில் படையினருக்கு தனி மரியாதையை ஏற்படுத்தி கொடுத்த விடயம் யுத்த வெற்றியாகும். பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்தவர்கள் என இலங்கை படையினரை சர்வதேச அந்தஸ்த்துக்கு உயர்த்திய பெருமை மஹிந்த ஆட்சியின் போது இடம்பெற்றது. 

ஒரு பக்கம்  சர்வதேசத்தின் போர்க்குற்றச்சாட்டுக்களை சுமந்து நின்றாலும் பயங்கரவாதத்தை முறியடிப்பது எப்படி என பல நாடுகளுக்கும் சென்று பாடம் எடுக்கும் அளவுக்கு இலங்கை படையினரின் தரம் உயர்ந்திருந்தது. 

மட்டுமின்றி இலங்கை வாழ் பெரும்பான்மையினருக்கு அவர்கள் கடவுள்கள் போன்ற பிரதிமையையும் ஏற்படுத்தத் தவறவில்லை. அதை கட்டிக்காக்கும் பொறுப்பை இராணுவ அதிகாரியாக இருந்து தற்போது ஜனாதிபதியாக விளங்கும் கோட்டாபய ராஜபக்க்ஷ ஏற்றிருக்கிறார். 

பொலிஸார் மத்தியில் பொது மக்களுக்கு மரியாதையும் கௌரவமும் ஏற்பட வேண்டுமானால் அவர்களும் படையினர் போன்றே சாதனைகளை செய்ய வேண்டியவர்களாக உள்ளனர். பொலிஸாரை நூறுசதவீதம் சுத்தப்படுத்தும் பொறுப்பை நானும் அமைச்சின் செயலாளரும் ஏற்றுக்கொள்வோம். சகல விதமான குற்றச் செயல்களையும் தடுத்து நிறுத்தும் ,கட்டுப்படுத்தும் வண்ணம் நாம் பொலிஸ் திணைக்களத்தை வலுப்படுத்துவோம் என அமைச்சர் சரத் வீரசேகர கூறியுள்ளார். 

பொது மக்கள் குற்றச் சம்பவங்கள் குறித்த முறைப்பாடுகளை செய்யவும் நீதி மற்றும் ஒழுங்கை பேணவும் நம்பியிருப்பது என்னவோ பொலிஸாரை மட்டுமே. எனினும் யுத்த காலத்தில் பொலிஸாரின் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன என்பதையும் மறுப்பதற்கில்லை. படையினருடன் அவர்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் போது மக்களின் பார்வை படையினரின் பக்கமே திரும்பியிருப்பதை அவதானிக்கலாம்.  

பாரம்பரிய  சீருடைகள், பயிற்சிகள் போன்றன இன்று வரை பொலிஸாரை ஆளுமையானவர்களாகவும் கம்பீரம் கொண்டவர்களாகவும் மாற்றவில்லை எனும் குறைகளை மக்கள் கூறி வருகின்றனர். அதன் காரணமாகவே விசேட அதிரடி படையினரை கூட மக்கள் இன்னும் அது படையினரின் ஒரு பிரிவு என நம்பிக்கொண்டிருக்கின்றனர். 

அவர்கள் பொலிஸ் பிரிவினர் என்பது பலருக்கு தெரியாதுள்ளது.  சகல விதத்திலும் பொலிஸ்துறை மறுசீரமைக்கப்படல் வேண்டும் என்பதை மறுக்க முடியாது தான். அதை எவ்வாறு கடைற்படை பின்புலம் கொண்ட அமைச்சர் முன்னெடுக்கப்போகின்றார் என்ற எதிர்ப்பார்ப்பு பொலிஸ் துறையினருக்கு மட்டுமல்லாது பொது மக்களுக்கும் எழுந்துள்ளது.