-சுபத்ரா -
இலங்கையில் பிரித்தானிய கூலிப்படைகள் தொடர்புபட்டிருந்த போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகள், தங்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பதை, கடந்தவாரம் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது. லண்டனின் மெட்ரோபொலிட்டன் பொலிஸ். இந்த விசாரணைகளுக்குத் தேவையான இரகசிய ஆவணங்களை வழங்குவதற்கு, பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் ஒத்துழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக் கிளம்பிய நிலையில் தான்,மெட்ரோபொலிட்டன் பொலிஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

விசாரணைகள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை மாத்திரம் உறுதிப்படுத்தியிருக்கின்ற, மெட்ரோபொலிட்டன் பொலிஸ், மேலதிக தகவல்கள் எதையும் வெளியிடவில்லை. 1980களின் தொடக்கத்தில், இலங்கையில் தமிழ் இயக்கங்களின் ஆயுதப் போராட்டம் தீவிரமடைந்த போது, ஆட்சியில் இருந்த ஜே.ஆர்.ஜயவர்த்தன அரசாங்கம், பிரித்தானியா, இஸ்ரேல், பாகிஸ்தான், அமெரிக்கா போன்ற நாடுகளிடம் இராணுவ மற்றும் நிபுணத்துவ உதவிகளைக் கோரியிருந்தது.

அப்போது பிரித்தானியாவில் ஆட்சியில் இருந்தவர் இரும்புச் சீமாட்டி என்று அழைக்கப்பட்ட மார்கிரட் தட்சர். அதே காலகட்டத்தில் இந்தியாவில் ஆட்சியில் இருந்தவர் இரும்புப் பெண் என்று அழைக்கப்பட்ட இந்திரா காந்தி. இந்தியா அப்போது, தமிழ்ப் போராளி அமைப்புகளுக்கு தார்மீக ஆதரவை வழங்கிக் கொண்டிருந்தது. அந்தக் கட்டத்தில், இலங்கை அரசுக்கு நேரடி இராணுவ உதவிகளை வழங்கினால், இந்தியாவின் பகைக்கு ஆளாக நேரிடும் என்று கருதிய மார்கிரட் தட்சர், இலங்கைப் படைகளுக்கு உதவ மறுத்து விட்டார்.


எனினும், கீனி மீனி என்ற அழைக்கப்பட்ட தனியார் பாதுகாப்பு அமைப்பின் உதவியை வழங்குவதற்கு அவர் இணங்கினார். அது கே.எம்.எஸ் என்ற நிறுவனத்துக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான தனிப்பட்ட உடன்பாட்டின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாயினும், அதன் செயற்பாடுகளில் பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்துக்கும் தொடர்புகள் இருந்தன.

அந்தக் காலகட்டத்தில் பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்துக்கு கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகத்தில் இருந்து அனுப்பப்பட்ட பல இராஜதந்திரக் குறிப்புகளில், கே.எம்.எஸ். நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக குறிப்பிடப்பட்டிருந்தன. இவ்வாறான நிலையில் தான், இந்த இராஜதந்திரக் குறிப்புகளில் பெரும்பாலானவை பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்தினால் அழிக்கப்பட்டு விட்டன.

எதற்காக இலங்கை தொடர்பான இராஜதந்திரக் குறிப்புகள் மாத்திரம் அழிக்கப்பட்டன என்ற கேள்வி கடந்த சில ஆண்டுகளாகவே எழுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பிரித்தானிய ஊடகவியலாளர் பில் மில்லர், இலங்கையில் பிரித்தானிய கூலிப்படைகளின் போர்க்குற்றங்களை விபரிக்கும் வகையில் Keenie Meenie: How British Mercenaries Got Away with War Crimes என்ற நூலை கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டிருந்தார்.

இந்த நூலுக்கான தகவல்களை அவர் தேடி ஆராய முயன்ற போது தான், இலங்கை தொடர்பான பெரும்பாலான இராஜதந்திரக் குறிப்புகள் அழிக்கப்பட்ட விபரமே வெளியே வந்தது. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த ஆவணங்கள் கோரப்பட்டபோது, அவை இல்லை என்ற பதில் கொடுக்கப்பட்டது.

இப்போது, மெட்ரோபொலிட்டன் பொலி ஸாரால் தொடங்கப்பட்டுள்ள விசாரணைகளுக்கும் கூட, பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பான ஆவணங்களை வழங்க மறுத்துள்ள, வெளிவிவகாரப் பணியகம், இந்த விசாரணைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அது தவிர, வெளிவிவகாரப் பணியகத்திடம் உள்ள, இரகசிய ஆவணங்களை ஒப்படைக்கவும் மறுப்புத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறான இராஜதந்திர ஆவணங்கள் 20 ஆண்டுகளுக்கு மட்டுமே பாதுகாப்பாக, இரகசியமாக வைக்கப்படுவது வழக்கம் என்றும், ஆனால் இலங்கை தொடர்பான ஆவணங்களை மட்டும் 40 ஆண்டுகளுக்கு வெளிப்படுத்தாமல் வைத்திருக்க முடிவு செய்யப்பட்டிருப்பது ஆச்சரியமாக இருப்பதாக ஊடகவியலாளர் பில் மில்லர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

இதனால், பிரித்தானிய அரசு 1980களில் எவ்வாறு இரட்டைப் போக்கை கடைப்பிடித்ததோ, அதேபோன்ற அணுகுமுறையைத் தான், இப்போதும் கையாள முனைகிறதா என்ற சந்தேகம் தோன்றுகிறது. 1980களில், ஜே.ஆர், இராணுவ உதவி கோரிய போது, நேரடியாக அந்த உதவியை வழங்காமல், பிரித்தானிய சிறப்புப் படையில் இருந்து ஓய்வுபெற்ற நிபுணர்களின் மூலம், இராணுவ உதவிகள் கிடைப்பதை உறுதிப்படுத்தியிருந்தது மார்கிரட் தட்சர் அரசாங்கம்.

பிரித்தானிய இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ரிச்சர்ட் குலுட்டர்பக் தலைமையிலான, கே.எம்.எஸ். என்ற தனிப்பட்ட பாதுகாப்பு நிறுவன அதிகாரிகள், தீவிரவாத முறியடிப்பு தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதை அப்போதைய பிரித்தானிய அரசு மகிழ்ச்சியுடன் அனுமதித்திருந்தது.

மேஜர் ஜெனரல் ரிச்சர்ட் குலுட்டர்பக் பிரித்தானியாவின் மிகவும் புகழ்பெற்ற தீவிரவாத முறியப்பு நிபுணர். அரசியல் வன்முறைகள், தீவிரவாதம், ஆட்கடத்தல், கப்பம் கோரல், கெரில்லா போர்முறை, கிளர்ச்சிகள், போதைப்பொருள் குற்றங்கள், சர்வதேச நெருக்கடிகள் போன்ற விடயங்கள் தொடர்பான, 20 நூல்களை எழுதியிருக்கிறார்.

இவரது தலைமையில் தான், இலங்கைப் படையினருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. ஆனால் பிரித்தானியாவில் இருந்தே ஆலோசனைகளை அவர் வழங்கினார். 1998இல் மேஜர் ஜெனரல் ரிச்சர்ட் குலுட்டர்பக் மரணமடைந்து விட்டார். அதுபோல, இவரது ஆலோசனையின் பேரில் இலங்கைகக்கு அனுப்பி வைக்கப்பட்ட கீனி மீனி அதிகாரிகளின் குழுவுக்கு தலைமை தாங்கியவர் லெப்னன்ட் கேணல் பிரையன் பற்ரி. (இவர் கடந்த ஜனவரி மாதம் மரணமாகி விட்டார்)

இவரது  தலைமையிலான கீனி மீனி அதிகாரிகள் தான், இலங்கையில் விசேட அதிரடிப்படைக்குப் பயிற்சிகளை அளித்தனர். அத்துடன், போர் நடவடிக்கைகளிலும் நேரடியயாகவே ஈடுபட்டனர். பலாலியிலும், கொழும்பிலும், இவர்கள் நிலைகொண்டிருந்தார்கள். இந்தியப் படையினரின் வருகையை அடுத்து, 1987 நவம்பரில் இவர்கள் இலங்கையில் இருந்து வெளியேறினார்கள்.

விசேட அதிரடிப்படையினருக்கு பயிற்சி அளித்தது, ஹெலிக்கொப்டர்களில் துணை விமானிகளாக தாக்குதல்களில் ஈடுபட்டது, மற்றும் போர் நடவடிக்கைககளின் போதான ஆலோசனைகளை வழங்கியது என இவர்களின் பணி விரிவானது.

இந்தச் சந்தர்ப்பங்களில் தான், பிரித்தானிய கூலிப்படையினர் போர்க்குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கிறது. இந்தியப் படைகள் விடுதலைப் புலிகளுடன் போரிட்டபோது, அவர்களுக்கும் கீனி மீனி அதிகாரிகள்  விமானிகளாக பணியாற்றினர் என்றும் பில் மில்லர் தனது நூலில் குறிபப்பிட்டிருக்கிறார்.

இவ்வாறான பங்குகள் தொடர்பான விசாரணைகளை மெட்ரோ பொலிட்டன் பொலிஸ் தான் வெளிப்படுத்த வேண்டும். 1975இல், எஸ்.ஏ.எஸ். எனப்படும், சிறப்பு வான் சேவைப் பிரிவின்  ஓய்வுபெற்ற அதிகாரிகளைக் கொண்டு, கீனி மீனி தனியார் பாதுகாப்பு நிறுவனம் உருவாக்கப்பட்டது.

அந்த நிறுவனம் உருவாக்கப்பட்ட போது, இணை நிறுவுனராக இருந்தவர் மேஜர் டேவிட் வோக்கர். அவரும் இலங்கையில் பணியாற்றியவர். 1990இல் கீனி மீனி நிறுவனம் மூடப்பட்ட  பின்னர், சலாடின் பாதுகாப்புச் சேவை என்ற நிறுவனத்தில் அவர் பணிப்பாளராக இருக்கிறார். இந்த நிறுவனத்துக்கும் கீனி மீனி நிறுவனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவர் கூறியிருக்கிறார்.

அத்துடன் கீனி மீனி நிறுவனம், இலங்கையில் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். போர்க்குற்றங்களளில் ஈடுபட்ட எவரும், அதனை ஒப்புக்கொள்வதில்லை. அதிலிருந்து தப்பிக்கவே முனைவார்கள். இவ்வாறான நிலையில், பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகமும் இலங்கைப் போரில் தமது பங்கை மறைக்க விரும்பகின்ற சூழலில், பிரித்தானியாவின் மெட்ரோ பொலிட்டன் பொலிஸ் எவ்வாறு உண்மைகளை வெளிக் கொண்டுவரப் போகிறது?