இலங்கையில் 140 கொரோனா தொற்றார்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். 

அதன்படி இன்று 3 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் நாளை திங்கட்கிழமை காலை 5 மணியுடன் சில பொலிஸ் பிரிவுகளும் கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதே வேளை கொழும்பில் நாளை காலை 5 மணி முதல் மூன்று கிராம சேவகர் பிரிவுகளும் , கம்பஹா மாவட்டத்திலும் சில பகுதிகளும் புதிதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.

கொழும்பு

கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படும் பகுதிகள் - புளுமென்டல் பொலிஸ் பிரிவு மற்றும் வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஜயபுர கிராம சேவகர் பிரிவு என்பன நாளை தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுகின்றன.

தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்படும் பகுதிகள்

கொழும்பில் முகத்துவாரம், கொட்டாஞ்சேனை, கிரான்பாஸ், ஆதுருப்பு வீதி, டாம் வீதி, வாழைத்தோட்டம், மாளிகாவத்தை, தெமட்டகொட மற்றும் மருதானை ஆகிய பொலிஸ் பிரிவுகளும், கொம்பனிவீதி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேகந்த கிராம சேவகர் பிரிவு, பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வனாத்தமுல்ல கிராம சேவகர் பிரிவு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாலமுல்ல கிராம சேவகர் பிரிவும் லக்சத வீடமைப்பு திட்டம் , மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரந்திய உயன வீடமைப்பு திட்டம் மற்றும் ஃபர்கசன் வீதியின் தெற்கு பகுதி (South of Ferguson Road) என்பன  தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும்.

புதிதாக தனிமைப்படுத்தப்படும் பகுதிகள்

கொம்பனி வீதி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹூணுபிட்டி கிராம சேவகர் பிரிவு, கருவாத்தோட்டம் (குருந்துவத்த) பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 60 ஆவது தோட்டம் மற்றும் வெள்ளவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோகிலா வீதி என்பன நாளை காலை 5 மணி முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கம்பஹா

கம்பஹாவில் தனிமைப்படுத்திலிலிருந்து விடுவிக்கப்படும் பகுதிகள்

களனி பொலிஸ் பிரிவு முழுமையாக தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படும் அதே வேளை , வத்தளை, பேலியகொடை மற்றும் கிரிபத்கொட ஆகிய பொலிஸ் பிரிவுகள் சில கிராம சேவகர் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுகின்றன.

புதிதாக தனிமைப்படுத்தப்படும் பகுதிகள்

வத்தளை

வத்தள பொலிஸ் பிரிவில் கெரவலபிட்டி, ஹேகித்த, குருந்துஹேன, எவரிவத்த மற்றும் வெலிகடமுல்ல ஆகிய கிராம சேவர்கர் பிரிவுகள் நாளை காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இவை தவிர ஏனைய பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுகின்றன.

பேலியகொடை

பேலியகொடைவத்தை, பேலியகொட கஹபட, மீகஹாவத்தை மற்றும் பட்டிய – வடக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள்; தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இவை இந்த பொலிஸ் பிரிவில் ஏனைய பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுகின்றன.

கிரிபத்கொட

கிரிபத்கொட பொலிஸ் பிரிவில் வெலேகொட – வடக்கு கிராம சேவகர் பிரிவு மாத்திரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுகின்றன. 

ஏனைய மாவட்டங்கள்

இவை தவிர நாட்டின் ஏனைய மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் என்று இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாட்டில் தற்போதைய நிலைவரப் படி, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 27,877 அதிகரித்துள்ளது. இன்று இதுவரை 649 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

7, 280 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று சந்தேகத்தில் 461 பேர் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.

இதேவேளை, 20, 460 கொரோனா தொற்றாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர். 

நாட்டில் 140 கொரோனா தொற்றாளர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர்.