(இராஜதுரை ஹஷான்)

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு நீக்கப்பட்டால் அரச நிதி ஊழல்வாதிகளினால் கொள்ளையடிக்கப்படும். அதிக விலைக்கு மின்சாரம் கொள்வனவு செய்யப்படும் போது மின்கட்டணம் அதிகரிக்கப்படும் இதனால் அரசாங்கம் பாரிய நெருக்கடியினை எதிர்க் கொள்ள  நேரிடும்.

பொதுபயன்பாட்டு ஆணைக்குழுவை நீக்க முன்னெடுக்கப்படும் சூழ்ச்சிகள் குறித்து ஜனாதிபதி விசேட கவனம் செலுத்த வேண்டும். என  மின்சார பொது சேவைகள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மின்சார மாபியாக்கள், ஊழல் மோசடியாளர்கள், அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மின்சாரத்துறையில் முன்னெடுக்கும் முறைக்கேடான நடவடிக்கை குறித்து தொடர்ந்து வெளிப்படுத்தியுள்ளோம்.

முறைகேடான விதத்தில் மின்சார ஒப்பந்தங்களை செய்து பில்லியன் கணக்கில் நிதி சேகரித்துள்ளார்கள்.

மின்சாரத்துறையில் இடம்பெறும். மோசடிகளை நன்கு அறிந்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது சுபீட்சமான கொள்கை திட்டத்தில் சிறந்த யோசனைகளை உள்ளடக்கினார்.

சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்ட விஞ்ஞாபனத்தில் 37 ஆம் பக்கத்தில் " கடந்த அரசாங்கத்தில் முறையற்ற விதத்தில் மின்சாரம் தொடர்பில் செய்துக் கொண்ட ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்சாரத்துறையில் முறைகேடான விதத்தில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன என்பதை பொதுபயன்பாட்டு ஆணைக்குழு,பாராளுமன்ற கோப்குழு மற்றும் கணக்காளர் நாயகம் ஆகியன  பகிரங்கப்படுத்தின.

இம்மோசடிகள் குறித்து மின்சார பொதுசேவை சங்கம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளது.

முறைக்கேடான ஒப்பந்தங்களினால் மின்சாரத்துறைக்கு இதுவரையில் 10 பில்லியன் ரூபா நிதி நட்டம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான ஒப்பந்தங்களை தொடர்ந்து நீடிக்க நிதி மோசடியில் ஈடுப்பட்டுள்ள அதிகாரிகள் முயற்சிக்கிறார்கள்.

இதற்கு பொதுபயன்பாட்டு ஆணைக்குழு தடையாக உள்ளதை அறிந்து ஜனாதிபதியின் செயலாளர் ஊடாக ஆணைக்குழுவை நீக்க சூழ்ச்சிகளை முன்னெடுக்கிறார்கள்.இவ்வாறான செயற்பாடு ஜனாதிபதி மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை பலவீனப்படுத்துவதாக அமையும்

மின்சாரத்துறையில் தொடர்ந்து முறைகேடுகள் இடம்பெற்றால் 30 ஆயிரம் சேவையாளர்களும், 70 இலட்ச வாடிக்கையாளர்களும் பாதிக்கப்படுவார்கள்.

அமெரிக்க நிறுவனத்தில் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்யவும்,10 வருடகாலத்துக்கு குறுகிய தேவைக்காக 200 மெகாவாட் மின் கொள்வனவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மின்னுற்பத்தி நிலையத்தை அமைக்க பொதுபயன்பாட்டு ஆணைக்குழு அனுதமி வழங்க மறுக்கிறது ஆகையால் ஆணைக்குழுவை நீக்க வேண்டும் என குறிப்பிடுகின்றனர்.மின்னு நிலையங்கள் நிர்மாணிக்கப்படுவதன் தாமதம் குறித்து ஆராயப்பட வேண்டும்.

மன்னார் மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது காற்று மின்னுற்பத்தி நிலைய நிர்மாணிப்புக்கு 2016 ஆம் ஆண்டு பொதுபயன்பாட்டு ஆணைக்குழு அனுமன வழங்கியது. ஒப்பந்தத்தின் பிரகாரம் கடந்த வருடமே இந்த மின்னுற்பத்தி நிலையம் நிர்மாணிக்கப்பட்டிருக்க வேண்டும்.

 பொதுபயன்பாட்டு ஆணைக்குழு நீக்கப்பட்டால் அரச நிதி  பல தரப்பினரால் மோசடி செய்யப்படும்.

 பொதுபயன்பாட்டு ஆணைக்குழு நீக்கப்பட்டால் மின்சாரம் அதிக விலைக்கு கொள்வனவு செய்யப்படும் .இதனால் மின்கட்டணம் அதிகரிக்கப்படும்.

இவ்வாறான சம்பவங்களினால் அரசாங்கம் பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொள்ள நேரிடும் ஆகவே இவ்விடயம் குறித்து ஜனாதிபதி உரிய கவனம் செலுத்த வேண்டும் என்பது சங்கத்தினரது கோரிக்கையாகும்.