டாக்டர் எஸ்.ஜெயராமன். 

தூக்கம் மனிதனுக்கு மிகவும் அவசியமானது. வாழ்நாளில் ஒவ்வொருவரும் மூன்றில் ஒரு பகுதியைத் தூங்கியே கழிக்கிறோம். நன்றாகத் தூங்கினால்தான் மனம் புத்துணர்ச்சி அடையும். உடலின் வளர் சிதை மாற்றம் நன்றாக நடைபெறும். செல்கள் புத்துணர்ச்சி பெறும். தூக்கமில்லாவிட்டால் உடலின் செயல்பாடுகள் நன்றாக நடைபெறாது. பலவிதமான நோய்கள் நம்மைத் தாக்கும். இதெல்லாம் சரி தூங்கும் போது பக்கத்தில் உறங்கியிருப்பவர் குறட்டை விட்டால் மற்றவர்கள் எப்படி தூங்குவது? என்று கேட்கிறீர்களா..?

இப்போது குறட்டையை குணப்படுத்தவும், குறட்டையை ஒலியை இல்லாமல் ஆக்கவும் நவீன கருவி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த கருவியின் பயன்பாட்டைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். குறட்டையால் அதிகளவில் பாதிக்கப்படுகிறவர்கள், அவர்களால் உடல் எடையை குறைக்கமுடியாமல் இருந்தாலோ அல்லது குறட்டையால் இரத்த அழுத்தம் அதிகரித்து அதனால் மூச்சு திணறல் ஏற்பட்டாலோ மருத்துவர்களை சந்தித்து இதற்கான கருவியை பொருத்திக் கொண்டு உடனடியாக நிவாரணமும், சத்திர சிகிச்சை அல்லது இந்த நவீன கருவியுடன் உதவியும் நாள்களை கடத்துதல் என எந்த சிகிச்சை பொருத்தமாக இருக்கிறதோ அதனை பின்பற்றலாம். 

ஸீபேப் (CPAP) எனப்படும் அந்த கருவியை மூக்கில் பொருத்திக் கொள்ளவேண்டும். உறங்கும் போது இதனை இயக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் இது தன் பணியைச் செய்யத் தொடங்கும். இந்தக் கருவி, ஒவ்வொருவருக்கும் எந்த அளவுக்கு காற்றழுத்தம் தேவையோ, அந்த அளவு அழுத்தத்துடன் மூச்சுப் பாதைக்குள் காற்றை அனுப்பி வைக்கிறது. இதனால், உடலுக்குத் தேவையான காற்று கிடைக்கிறது. எனவே குறட்டைவிடாமல், எந்தத் தடங்கலுமில்லாமல் நன்றாகத் தூங்க ஆரம்பிக்கிறார்கள். குறட்டை விட்டு இவ்வளவு நாட்கள் தூங்கியதால் உடலுக்கு ஏற்பட்ட பல பாதிப்புகள் குணமாக ஆரம்பிக்கின்றன. இந்த கருவியை ஒரு சிலர் அவர்களின் ஆரோக்கியத்தை முன்னிறுத்தி ஆயுள் முழுவதும் பயன்படுத்தவேண்டியதிருக்கும். ஒரு சிலருக்கு இதனை பயன்படுத்தத் தொடங்கியவுடன், உடலில் குறட்டையினால் பாதிக்கப்பட்ட ஆரோக்கிய கேடு மீட்கப்படும். அதன் பின்னர் நாளடைவில் இக்கருவியின் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள இயலும். அதன் பின்னர் பொருத்தமான தருணத்தில் சத்திர சிகிச்சை செய்தும் இதனை முழுமையாக குணப்படுத்தலாம்.

இதனை தவிர்த்தாலோ அல்லது அலட்சியப்படுத்தினாலோ உங்களுக்கு புற்று நோய் வரக்கூடிய ஆபத்தும் உண்டு என்பதை அறிந்துகொள்ளலாம். எப்படியென்றால்,குறட்டைவிடும்போது உடலுக்குத் தேவையான அளவு காற்று கிடைக்காது. இதனால் செல்களுக்குப் போதுமான ஓக்ஸிஜன் கிடைப்பதில்லை. செல்கள் தோன்றுவது, அழிவது, வளர்வது போன்றவற்றில் பிரச்னை ஏற்படுகிறது. புற்றுநோய் ஏற்பட இதுவும் ஒரு காரணமாகிவிடுகிறது. எனவே குறட்டைவிட்டுத் தூங்குவதை ஒரு நோய் என்றுதான் சொல்கிறார்கள் மருத்துவர்கள். 

எனவே குறட்டையை வரவிடாமல் தடுக்க வேண்டும் என்றால், உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு, உடல் எடைகுறைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தவேண்டும். கொழுப்பு சத்துள்ள உணவுப்பொருட்களை தவிர்க்கவேண்டும். மது, புகைப்பழக்கம் மற்றும் உறக்கத்திற்கான தூக்க மாத்திரை சாப்பிடுவதை ஆகியவற்றை முற்றாகத் தவிர்க்கவேண்டும்.

டொக்டர் எஸ் ஜெயராமன் M.S.,

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்