(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை  கட்டுப்படுத்த வேண்டுமாயின் நாட்டு மக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இம்மாதத்துக்குள்  நாடு வழமை நிலைமைக்கு திரும்பும் என  துறைமுக அபிவிருத்தி கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

களுத்துறை பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற  நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், 

 எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அரசியல் நோக்கங்களுக்காக மக்கள் மத்தியில் தவறான  நிலைப்பாட்டை தோற்றுவிக்கிறார். 

நல்லாட்சி அரசாங்கத்தில் செல்வாக்கு செலுத்தியவர்கள் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியினராக சிறந்த கொள்கை குறித்து கருத்து தெரிவிப்பது வேடிக்கையாகவுள்ளது.  

நல்லாட்சி அரசாங்கத்தையும், அதில் செல்வாக்கு செலுத்தியவர்களையும் நாட்டு மக்கள் முழுமையாக புறக்கணித்துள்ளார்கள். எனவே அவர்கள் மீண்டும் இவர்களிடம் ஆட்சியதிகாரத்தை வழங்கமாட்டார்கள்.

2021 ஆம் ஆண்டு முதல் தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள் செயற்படுத்தப்படும். கொவிட்-19 வைரஸ் தாக்கம் அனைத்து துறைகளுக்கும் பாரிய சவாலாக உள்ளது. இதனை கட்டுப்படுத்தவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் நாட்டு மக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 

இம்மாதத்துக்குள் நாடு வழமை நிலைமைக்கு திரும்பும். அமுலில் உள்ள  தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டாலும் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் தொடர்ந்து கடுமையாக செயற்படுத்தப்படும் என்றார்.