கடந்த ஒரு வாரமாக கொழும்பில் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகிறது. இதனால் குறித்த பகுதி அபாயமுடையது என்று சுகாதார தரப்பினராலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய கொழும்பில் இரண்டாம் அலையின் பின்னர் நேற்று காலை வரை 10,884 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 

இம்மாவட்டத்தில் கொழும்பு 1 தொடக்கம் 15 வரையான பகுதிகளிலும், வெலிக்கட, அங்கொடை, அத்திட்டிய, பொரல்லஸ்கமுவ,தெஹிவளை, கொத்தொட்டுவ, மடபத்த, புவக்பிட்டிய, ராஜகிரிய மற்றும் தலவத்துகொட ஆகிய பகுதிகளில் இவ்வாறு தொடர்ந்தும் தொற்றாளர்கள் இனங்காணப்படுவதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 27, 000 ஐ கடந்துள்ள போதிலும் 20,000 இற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். எனினும் இரண்டாம் அலை உருவானதன் பின்னர் அபாயமுடைய பிரதேசமாகக்  காணப்பட்ட  கம்பஹாவில் தொற்றாளர்கள் எண்ணிக்கை குறைவடைந்திருந்தாலும், கொழும்பில் அதனை விட அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.

இவ்வாறு நேற்று சனிக்கிழமையும் 669 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இவர்களில் 487 பேர் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர். ஏனைய 182 பேரும் சிறைச்சாலைகள் கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர்.

அதற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 27, 228 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று சனிக்கிழமையுடன் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்களின் எண்ணிக்கை 23,674 ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 20,090 பேர் குணமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். மேலும் 7008 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஒரு கொரோனா மரணம் பதிவானது. பிலியந்தல பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய ஆணொருவர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து , தேசிய தொற்று நோய் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போது கடந்த 4 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இவரது உயிரிழப்பிற்கான காரணம் கொவிட் தொற்றுடன் ஏற்பட்ட நியுமோனியா நிலைமை மற்றும் இதய பாதிப்பாகும். அதற்கமைய நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 130 ஆக உயர்வடைந்துள்ளது.

இதுதவிர கொவிட் 19 தொற்றின் காரணமாக ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்றைய தினம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைவாக இலங்கையில் பதிவான கொவிட்19 தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த நோயாளர்களின் எண்ணிக்கையும் 137 ஆக உயர்வடைந்துள்ளது.

01. பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்த 91 வயதான ஆண் நபர். 2020 டிசம்பர் மாதம் 03 ஆம் திகதி வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுக்குள்ளானமையினால் ஏற்பட்ட மாரடைப்பாகும்.

02. சிறைச்சாலை கைதியான 53 வயது ஆண் நபர். 2020 டிசம்பர் மாதம் 01ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றினால் ஏற்பட்ட நிமோனியா நிலை ஆகும்.

03. தெமட்டகொடை பிரதேத்தைச் சேர்ந்த 56 வயதான பெண். தேசிய தொற்று நோயியல் நிறுவனத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற வேளையில் 2020 டிசம்பர் மாதம் 04ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றினால் ஏற்பட்ட நிமோனியா நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

04. பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்த 81 வயதான பெண். 2020 நவம்பர் மாதம் 28 ஆம் திகதி வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுடன் ஏற்பட்ட கடுமையான நுரையீரல் நோய் மற்றும் இருதய நோய் நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

05. கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 84 வயதான பெண் 2020 டிசம்பர் 04ஆம் திகதி வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுடன் நிமோனியா நிலை ஆகும்.

06. வெலிக்கடை சிறைச்சாலை கைதியான 66 வயது ஆண் நபர். சிறைச்சாலை வைத்தியசாலையில்  2020 டிசம்பர் மாதம் 02ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுடன் நிமோனியா நிலை ஆகும்.

07. வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதான பெண். தேசிய தொற்று நோயியல் நிலையத்தில் சிகிச்சைப் பெற்ற வந்த நிலையில் 2020 டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் நீரிழிவு அதி உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொவிட் 19 நிமோனியா நிலைமையுடன் உறுப்புகள் செயலிழந்தமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.