(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

என்மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கொன்று விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளதால் எதிர்வரும் 8 ஆம் திகதி நான் சிறைக்கு செல்லவுள்ளேன். எனவே இன்றே எனது பாராளுமன்ற இறுதிநாள்  என நினைக்கின்றேன். எப்படியும் என்னை இரண்டு ஆண்டுகளுக்கு சிறையில் அடைப்பார்கள் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை, துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுகள், இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதம் இடம்பெற்ற வேளையில் உரையாற்ற ஆரம்பித்த எதிர்க்கட்சி உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக நீதிமன்ற விசாரணைகள் குறித்தும், ஷானி அபேசேகரவின் வழக்குகள் குறித்தும் பேசினார். இந்த அரசாங்கம் குற்றவாளிகளை காப்பாற்றவும், குற்றவாளிகளுக்கு எதிரானவர்களை தண்டிக்கவும் துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நீதியை நிலைநாட்டுவோம் என வந்த ராஜபக்ஷ அரசாங்கம் இன்று குற்றவாளிகள் அனைவரையும் விடுவித்து வருகின்றனர் என்றார்.

இதன்போது ஆளும் கட்சி உறுப்பினர்கள் ரஞ்சன் ராமநாயக எம்.பிக்கு எதிரான குரல் எழுப்பி அவரது உரையை குழப்ப ஆரம்பித்தனர். எனினும் கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் பேசிக்கொண்டிருந்த ரஞ்சன் எம்.பி,  சிறையில் உள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயகவின் வழக்குகள், பிள்ளையான் விடுவிக்கப்பட்டதன் பின்னணி என்ற காரணிகளை கூறினார். இதன்போது கடுமையான எதிர்ப்பு ஆளும் தரப்பில் இருந்து எழுந்தது.

இந்நிலையில் கூறிய ரஞ்சன் எம்.பி " சபாநாயகர் அவர்களே, எதிர்வரும் 8 ஆம் திகதி சிறைக்கு செல்லவுள்ளேன், எனக்கு இன்றே பாராளுமன்றத்தில் இறுதிநாள் என நினைக்கின்றேன். எனக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ வழக்கொன்றை தொடுத்துள்ளார். எனவே இந்த வழக்கில் என்னை நிச்சயமாக சிறையில் அடைப்பார்கள். குறைந்தபட்சம் ஆறு மாதங்கள், கூடியது இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைப்பார்கள். எனவே என்னை உரையாற்ற இடமளியுங்கள் என்றார்.