(இராஜதுரை ஹஷான்)

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தில் கொவிட்-19 வைரஸ்  தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்த கைதிகளின் உடலை தகனம் செய்வதா? அல்லது புதைப்பதா? என்ற தீர்மானம் எதிர்வரும் வாரம் எடுக்கப்படும். 

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தி தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த நாட்டு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தொலைநோக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த  தெரிவித்தார்.

பொதுஜன  பெரமுன காரியாலயத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன  குறுகிய காலத்தில் மக்களாணையை முழுமையாக  பெற்றுள்ளது. 2015 ஆம் அரசியல் ரீதியாக ஏற்பட்ட தவறை நாட்டு மக்கள் ஜனநாயக ரீதியாக திருத்தி ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையில் பலமான அரசாங்கத்தை ஸ்தாபித்துள்ளார்கள். 

நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் பழிவாங்கல் தீவிரமாக காணப்பட்டன. போலியான காரணிகளை அடிப்படையாக கொண்டு முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்‌ஷ காலத்தில்  முக்கிய தரப்பினர் மீது வழக்கு தொடுக்கப்பட்டன.

ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து நீதித்துறை பலப்படுத்தப்பட்டுள்ளது. நீதிமன்ற கட்டமைப்பு சுயாதீனப்படுத்தப்பட்டது. பலருக்கு  தற்போது நீதி கிடைக்கப்பெற்றுள்ளது. 

மஹர சிறைச்சாலையில் கடந்த மாதம் இடம்பெற்ற அமைதியின்மை சம்பவம் குறித்து மாறுப்பட்ட கருத்துக்கள் அரசியல் மட்டத்தில் குறிப்பிடப்படுகின்றன. 

சம்பவத்தின் உண்மை தன்மையினை வெளிகொணரும் நோக்கில் உயர்மட்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் உயிரிழந்த கைதிகள் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் இவர்களின் உடலை புதைப்பதா? அல்லது தகனம் செய்வதா? என்ற பிரச்சினை எழுந்துள்ளது. இவ்விடயத்தில்  நீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாக கொண்டு செயற்படுவது  சிறந்தது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் தீர்மானம் எதிர்வரும் வாரம் கிடைக்கப் பெறும். 

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த நாட்டு மக்கள் தொடர்ந்து முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.