(இராஜதுரை ஹஷான்)

2021 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்படும். தேசிய உற்பத்திகளை மேம்படுத்துவது அரசாங்கத்தின் பிரதான இலக்கு என பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல  தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தவும், பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கவும்  அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து சிறந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. 

2021 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் குறித்து எதிர்த்தரப்பினர் போலியான குற்றச்சாட்டுகளை அரசியல் நோக்கம் கருதி முன்வைக்கிறார்கள்.

நாட்டு மக்களுக்கு தற்காலிகமாக நிவாரணம் வழங்கும் வகையில் வரவு - செலவு திட்டம் தயாரிக்கப்படவில்லை. 

இம்முறை வரவு - செலவு திட்டம் மக்களின் கருத்துக்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்கள். 

ஆகவே மக்கள் சுயமாக முன்னேற்றமடையவும்,  நிரந்தர முன்னேற்றம் அடையவும் வரவு - செலவு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டுகான வரவு - செலவு திட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்படும். தேசிய உற்பத்திகளை மேம்படுத்துவது அரசாங்கத்தின் பிரதான இலக்கு என்றார்.