(எம்.மனோசித்ரா)
நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் மாத்திரமல்ல, எவ்வாறான நெருக்கடியான சூழல் காணப்பட்டாலும் பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில் முப்படையினர், பொலிஸார் மற்றும் புலனாய்வுப்பிரிவு என்பன தொடர்ந்தும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறது. எனவே எந்த சந்தர்ப்பத்திலும் நாட்டில் மீண்டும் பயங்கரவாத செயற்பாடுகள் முன்னெடுக்க இடமளிக்கப்பட மாட்டாது என்று இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சி ஊடகமொன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே இராணுவத்தளபதி இதனைத் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கி பயணித்த பேரூந்தொன்றில் ஒரு கிலோவிற்கும் அதிக நிறையுடைய கிளைமோர் குண்டுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இவ்வாறான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அவதானிக்கும் போது இலங்கையில் மீண்டும் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தலைதூக்குகின்றன என்பது வெளிப்படுகிறதா? என குறித்த நிகழ்ச்சியில் கேட்க்கப்பட்ட போதே இராணுவத்தளபதி இவ்வாறு பதிலளித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் ,

2009 மே மாதம் 18 ஆம் திகதி விடுதலைப்புலிகளை நாட்டிலிருந்து முழுமையாக ஒழிக்க அனைவரும் இணைந்து செயற்பட்டிருந்தோம். அன்று முதல் இன்று வரை விடுதலைப் புலிகளால் யுத்தத்தின் மூலம் செய்ய முடியாததை அவர்களது கொள்கைகள் மூலம் நிறைவேற்றுவதற்கு வெளிநாடுகளிலிருந்தும் இலங்கைக்குள்ளிருந்தும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

கைப்பற்றப்பட்ட குண்டு புதிதாக தயாரிக்கப்பட்டதல்ல. கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் குடும்பத்திலிலுள்ள பெண்னொருவர் குறுகிய காலம் விடுதலைப்புலிகளுடன் செயற்பட்டவர் என்பது விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. எவ்வாறிருப்பினும் நாட்டில் சுமார் 12, 000 முன்னாள் போராழிகளுக்கு புனர்வாழ்வளித்து அவர்களை சமூகத்துடன் இணைப்பதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இவ்வாறானவர்களையோ அல்லது வருமையிலுள்ள குடும்பங்களையோ வெளிநாடுகளில் உள்ளவர்கள் பணத்தைக் கொடுத்து பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுத்த முயற்சிக்கும் குழுக்கள் உள்ளன. எனவே கொவிட் மாத்திரமல்ல, எவ்வாறான நெருக்கடி நிலைமை காணப்பட்டாலும் நாட்டில் மீண்டும் பயங்கரவாதத்தை தலைதூக்க இடமளிக்காதிருப்பதற்கான நடவடிக்கைகளை முப்படை மற்றும் பொலிஸார் தொடர்ந்தும் முன்னெடுப்பார்கள்.

எவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும் மிகவும் உன்னிப்பாக அவதானிக்கும் இராணுவமே இலங்கையில் காணப்படுகிறது. எனவே நாட்டு மக்களை பயங்கரவாத செயற்பாடுகளிடமிருந்து பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் தொடர்ந்தும் முன்னெடுப்போம் என்றார்.