(இராஜதுரை ஹஷான்)

கிழக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு  காண  தமிழ் தேசிய கூட்டமைப்பு  கடந்த அரசாங்கத்தில் கவனம் செலுத்தவில்லை. ஆனால் நாம் வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு மொத்த வியாபாரிகள் - வியாழேந்திரன் சாடல் |  Virakesari.lk

பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், 

வடக்கு , கிழக்கு மாகாண மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள். சுபீட்சமான எதிர்கால கொள்கையின் அடிப்படையில்  மாகாணங்கள் சுயமாக  பொருளாதார மட்டத்தில் முன்னேற்றமடைய வேண்டும். இதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

 எதிர்த்தரப்பில் உள்ள வடக்கு மற்றும் கிழக்கு அரசியல்வாதிகள் அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிக்கிறார்கள். நல்லாட்சி அரசாங்கத்தில்  தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதான பலம் மிக்க எதிர்கட்சியாக காணப்பட்டது.

எனினும் கூட்டமைப்பு நல்லாட்சி அரசாங்கத்தின் வரவு - செலவு திட்டத்துக்கு ஆதரவு  வழங்கவும் , அரசாங்கத்துக்கும், பிரதமருக்கு எதிராக  கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைகளுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு மாத்திரமே மக்களாணையை பயன்படுத்தியது. 

 கிழக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண கூட்டமைப்பு அக்கறை கொள்ளவில்லை. கிழக்கு அபிவிருத்திக்காக உரிய திட்டம் 2021 ஆம் ஆண்டு  முதல் செயற்படுத்தப்படும். ஜனாதிபதியால் கிழக்கு மக்களின் வாழ்க்கை தர முன்னேற்றத்துக்கு பல செயற்திட்டங்களை செயற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது என்றார்.