தனியார் வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சைக்கான அனுமதி குறித்து ஆராய்வு

By T Yuwaraj

04 Dec, 2020 | 04:05 PM
image

(க.பிரசன்னா)

கொவிட்-19 நோயாளிகள் விரும்பினால் அவர்களை தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதற்கான வாய்ப்புகள் தொடர்பாக ஆராய்வதற்கான கூட்டம் கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் நேற்று வியாழக்கிழமை இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது.

ஆலோசகர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களைக் கொண்ட மருத்துவ நிபுணர்களின் உயர்மட்டக் குழுவினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கொவிட்-19 நோயாளிகள் விரும்பினால் அவர்களை தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதற்கான வாய்ப்புகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற விரும்பும் வைரஸ் பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்கு இது போன்ற வாய்ப்புகள் இருக்க வேண்டுமென்று மருத்துவ நிபுணர்கள் குறிப்பிட்டதுடன், இதன் மூலம் அரச துறைகளில் நிலவும் நெரிசலைக் குறைக்கவும், குறைந்த வருமானம் கொண்ட குழுக்களுக்கு அதிக இடத்தை உருவாக்கவும் முடியுமென தெரிவித்திருந்தனர்.

இவ்விடயம் தொடர்பாக முடிவொன்றை எடுப்பதற்கு முன்னர், குறித்த ஆலோசனைகள் விரைவில் நொப்கோ பணிக்குழு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் ஏனைய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களுக்கு உறுதியளித்தார். 

பின்னர் குறித்த மருத்துவக் குழுவினர் கொவிட்-19 கட்டுப்பாட்டுப் பணிகள் தொடர்பான தற்போதைய நிலைமையினை நொப்கோ தலைவரிடமிருந்து அறிந்து கொண்டனர்.

குறித்த கலந்துரையாடலில் அறுவை சிகிச்சை நிபுணத்துவ ஆலோசகர் டாக்டர் மாயா குணசேகர, ஆலோசகர் மருத்துவர் (பேராசிரியர்) அர்ஜுன டி சில்வா, மகளிர் மருத்துவ நிபுணர் (பேராசிரியர்) ஹேமந்த தோடம்பஹல, உடற்சுரப்பியல் நிபுணர் (பேராசிரியர்) பிரசாத் கட்டுலந்த மற்றும் ஆலோசகர் மருத்துவர் டாக்டர் எராங்க நாரங்கொட ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right