(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

தமிழ் மக்களின் சகல பிரச்சினைகளையும் தீர்க்க அரசாங்கம் உணர்வுபூர்வமான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்தால் எமது மக்களுக்காக நாமும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகவே உள்ளோம் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

எல்லோரையும் அழித்தது போன்று தமிழ் கூட்டமைப்பையும்  அழித்திருக்க வேண்டுமென பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கூறிய கருத்துக்கு  அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை  இடம்பெற்ற 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பது அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய போதே இதனை வலியுறுத்திய அவர் மேலும் கூறுகையில்,

அமைச்சர் சரத் வீரசேகர தமது உரையின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களின் செயற்பாடுகள் காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பை தடைசெய்ய வேண்டுமென கூறியிருந்தார்.

ஹிட்லர் அழிந்த பின்ன அவரது கட்சியை தடைசெய்தது போன்று புலிகள் தோற்கடிக்கப்பட்டப் பின்னர் கூட்டமைப்பை தடை செய்திருந்தால் ஒருவரும் மிஞ்சியிருக்க மாட்டார்களென கூறியிருந்தார்.

எமது மக்களுக்கு உள்ள பிரச்சினைகளை அமைச்சர் சரத் வீரசேகர முதலில் முழுமையாக ஆராய வேண்டும். ஏன் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதென்ற கருத்தைக்கூட அவர் அறிய முற்படவில்லை.

கடந்த 29ஆம் திகதி இந்துக்கள் தீபமேற்றி வழிப்படும் ஒருநாளாகும். கார்த்திகை 29ஆம் நாளில்  தீபம்  ஏற்றி வழிபடும் அந்த நாளில் அமைச்சர் சரத் வீரசேகரவின் அமைச்சின் கீழ் உள்ள பொலிஸ் பாதுகாப்பு பிரிவுகள் ஆலயங்களுக்கு சென்று இடையூறு செய்தனர். தீபம் ஏற்றிய நபர்களை தாக்கினர்.

ஜனாதிபதி ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ எனக் கூறும் நிலையில் இந்து மக்களின் வணக்க நிகழ்வாக உள்ள கார்த்திகை தீப நிகழ்வை ஏன் தடுத்தீர்கள்?. தமிழ் இனத்திற்கு இந்த நாட்டில் தொடர்ச்சியாக அநீதிகள் இழைக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. முன்னர் இந்து கலாசார அமைச்சராக இருந்தவர் தற்போது வடக்கில் அமைச்சராக இருக்கிறார். அவர் அமைச்சராகவிருந்தும்கூட வடக்கில் இந்துக்களின் வழிபாட்டை பொலிஸார் தடுத்துள்ளனர் என்பதை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

1987ஆம் ஆண்டு தாக்குதலின் போது இந்திய விமானப் படை உணவுகளை கொடுக்காதிருந்தால் அன்றே யுத்தத்தை முடித்திருப்போமென அமைச்சர்  கூறியுள்ளார். யுத்தத்தை முடித்தது நீங்களோ அல்லது இராணுவத்தளபதியோ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளரோ அல்ல,  உலக நாடுகளின் ஒத்துழைப்புடனும் இராணுவ உதவிகளுடனும் தான் யுத்தத்தை முடித்தீர்கள். எல்லோரையும் அழித்தது போன்று கூட்டமைப்பை அழித்திருக்க வேண்டுமென கூறிய சொல்லை நான் வன்மையாக கண்டிப்பதுடன்  இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்.  

எமது மக்களின் பிரச்சினையை நீங்கள் நேரில் பார்க்கவேண்டும். வடமாகாணத்திற்கு விஜயம் செய்து எவ்வளவு இராணுவ சோதனைச் சாவடிகள் உள்ளன என்பதை பார்க்க வேண்டும். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் மன்னார் மாந்தை மேற்கில் ஏற்கனவே 1500 ஏக்கரில் இராணுவ முகாம் உள்ள நிலையில் மேலும் 3500 ஏக்கர் காணியை அபகரித்து இராணுவ முகாமை விரிவாக்கியுள்ளனர்.  அங்கு இராணுவ முகாமை விரிவாக்க வேண்டிய தேவை என்ன?. யுத்தம் யுத்தம் எனக் கூறுகின்றீர்கள். ஆனால், எமது மக்களின் நடைமுறை பிரச்சினையை ஏன் அறிய முற்படுவதில்லை. நேரடியாக வந்து எமது மக்கள் இராணுவக் கெடுப்பிடிக்குள் எவ்வளவு  துன்பப்படுகிறார்கள் என்பதை பாருங்கள்.

எமது மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நீங்கள் நடவடிக்கை எடுப்பீர்கள் என்றால் அரசாங்கத்துடன் கதைக்க நாம் எப்போதுமே தயாராக உள்ளோம். எமது மக்களின் ஒவ்வொரு பிரச்சினையையும் நீங்கள் தீர்த்து வைப்பீர்கள் என்றால் எமக்கிடையில் எந்த முரண்பாடுகளும் வராது. அரசாங்கம் தனது பலவீனத்தை மூடி மறைக்க சிங்கள இனவாதத்தை தூண்டி ஆட்சி செய்கின்றீர்கள். எமது மக்களின் உரிமைகள், சுதந்திரதத்துடன் இருக்க விடுவீர்கள் என்றால், நீங்கள் அனுபவிக்கும் அனைத்தையும் நாமும் அனுபவிக்க முடியும் என்றால் அதற்கு நீங்கள் உண்மையாக பேச வருவீர்கள் என்றால் நாங்களும் உங்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகவே உள்ளோம் என்றார்.