நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வெளி மாவட்டங்களில் இருந்து இம்முறை பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள மன்னாரிற்கு வரும் வியாபாரிகளின் பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று வெள்ளிக்கிழமை (04.12.2020) ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்த நிலையில் உள்ளது. இதனால் நாட்டின் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக மக்களை பாதுகாக்க வேண்டிய கடற்பாடு எமக்கு உள்ளது.

ஒவ்வொரு வருடமும் மன்னார் மாவட்டத்தில் நத்தார் மற்றும் புதுவருட பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகள் மன்னார் நகர சபை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருவது வழமை.

குறித்த வியாபார நடவடிக்கைகளுக்கு அதிக அளவில் தென்பகுதி வியாபாரிகள் மன்னாரிற்கு வந்து வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

ஆனால், இந்த முறை தென்பகுதி வியாபாரிகள் மன்னாரிற்கு வந்து பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள மன்னார் நகர சபை தடை விதித்துள்ளது.

எனவே, இம்முறை பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள தென்பகுதி வியாபாரிகள் மன்னாரிற்கு வருவதை தவிர்த்துக்கொள்ளவேண்டும்.

எனினும், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் உள்ளூர் வியாபாரிகளுக்கு மாத்திரம் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள மன்னார் நகர சபை உரிய அனுமதியை வழங்கும்.

புதிதாக எந்த வியாபாரிகளுக்கும் பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட மாட்டாது. 

எனவே, தென்பகுதி வியாபாரிகள் இம்முறை மன்னாரில் பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் தாக்கம் முழுமையாக நீங்கிய பின்னர் எதிர்வரும் காலங்களில் பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகளை மன்னார் நகர சபை பிரிவில் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும் என மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மேலும் தெரிவித்தார்.