(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொவிட் - 19 இரண்டாம் அலை இனங்காணப்பட்டு இன்றுடன் இரண்டு மாதங்கள் நிறைவடைகின்றன. இவ்வருடம் ஜனவரி 27 ஆம் திகதி நாட்டில் முதலாவது தொற்றாளராக சீனப் பெண்னொருவர் இனங்காணப்பட்டார். அதனையடுத்து ஒக்டோபர் 4 ஆம் திகதி வரையான 9 மாதங்களில் நாட்டில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 3396 ஆகக் காணப்பட்டது.

எனினும் ஒக்டோபர் 4 ஆம் திகதி மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் பெண்ணொருவருக்கு தொற்று உறுதிப்பட்டததையடுத்து நேற்று வியாழக்கிழமை வரையான இரு மாதங்களில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இதனை இலங்கையின் இரண்டாவது கொரோனா அலையாக சுகாதார தரப்பினர் அறிவித்துள்ளனர். முதலாவது அலையில் அதாவது 9 மாதங்களில் நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 13 ஆகவே காணப்பட்டது. எனினும் இரண்டாம் உருவாகி இரு மாதங்களில் 116 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதேவேளை முதலாம் அலையில் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரமே நூற்றுக்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர். கொழும்பு தவிர கம்பஹா, புத்தளம், களுத்துறை, அநுராதபுரம், கண்டி, குருணாகல் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் 10 – 40 க்கு இடைப்பட்ட எண்ணிக்கையிலான தொற்றாளர்களே பதிவாகினர்.

ஏனைய மாவட்டங்களில் மிகக்குறைந்தளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட அதேவேளை , வவுனியா, திருகோணமலை, நுவரெலியா, கினிநொச்சி, மன்னார் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் ஒரு தொற்றாளரேனும் இனங்காணப்படவில்லை. ஆனால் இரண்டாம் அலையில் நாட்டிலுள்ள 25 மாவட்டங்களிலும் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொடை கொத்தணியில் இனங்காணப்பட்ட அதேவேளை ஒக்டோபர் 27 ஆம் திகதி பேலியகொடை மீன் சந்தையில் முதலாவதாக தொற்றாளர்கள் சிலர் இனங்காணப்பட்டனர். அதனைத் தொடர்ந்தே தற்போது வரை அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். அதற்கமைய இரண்டாவது அலையில் தொற்றார்கள் எண்ணிக்கை 22,211 ஆக உயர்வடைந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை இலங்கையில் நாளொன்றில் அதிகளவான தொற்றாளர்களின் எண்ணிக்கை பதிவாகியுள்ளது. புதனன்று 878 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

நேற்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்

இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை 627 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 26,038 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 19,032 பேர் குணமடைந்துள்ளதோடு , 6,604 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வியாழக்கிழமை பதிவான மரணங்கள்

நேற்று 5 கொரோனா மரணங்கள் பதிவாகின. அதற்கமைய நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 126 ஆக உயர்வடைந்துள்ளது.

01.கொலன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதான பெண்ணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுக்கொண்டிருந்த வேளையில் நவம்பர் மாதம் 28ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் இருதய நோய் மற்றும் நீரிழிவு காரணமாக ஏற்பட்ட சிக்கல் நிலைமையுடன் கொவிட் 19 வைரஸ் தொற்று அதிகரித்தமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த 89 வயதான ஆண்ணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் 2020 டிசம்பர் மாதம் 02ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்று மற்றும் அதியுயர் இரத்த அழுத்தத்துடன் மூளையின் உட்பகுதியில் இரத்தம் ஏற்பட்டமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 3. கொழும்பு 10 பிரதேசத்தைச் சேர்ந்த 85 வயதான ஆண்ணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் 2020 நவம்பர் 30 ஆம் திகதி உயிரிழந்தார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 நோய்த்தொற்றுடன் கடுமையான பாக்டீரியா தொற்று காரணமாக ஏற்பட்ட சிக்கல் நிலையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. கொழும்பு 10 பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதான ஆண்ணொருவர் 2020 டிசம்பர் மாதம் 02ஆம் திகதி வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 நோய்த்தொற்றுடன் ஏற்பட்ட மாரடைப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 5. கொழும்பு 02 பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதான ஆண்ணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுக்கொண்டிருந்த வேளையில் நேற்று 03 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுடன் நிமோனியாவுடன் சுவாசக்குழாய் செயலிழப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் 10,000 ஐ கடந்த தொற்றாளர்கள்

கொழும்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். நேற்று முன்தினம் புதன்கிழமை இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 402 பேர் கொழும்பில் இனங்காணப்பட்டுள்ளனர். அதற்கமைய இரண்டாம் அலையின் பின்னர் கொழும்பில் 10,140 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

ஏனைய மாவட்டங்கள்

கொழும்பு தவிர கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். ஒக்டோபர் 4 ஆம் திகதிக்கு பின்னர் கம்பஹாவில் 6502 தொற்றாளர்களும், களுத்துறையில் 1073 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதே வேளை கண்டியில் 512, குருணாகலில் 372, இரத்தினபுரியில் 330, காலியில் 264, கேகாலையில் 253, புத்தளத்தில் 227, நுவரெலியாவில் 147, அம்பாறையில் 120, கிளிநொச்சியில் 20 என தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதேவேளை புதன்கிழமை இனங்காணப்பட்ட 88 தொற்றாளர்கள் எந்த மாவட்டத்திலோ அல்லது இடத்திலோ சேர்க்கபடாதவர்கள் என்று கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

19,000 இற்கும் அதிகமானோர் குணமடைவு

கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 25 000 ஐ விட அதிகரித்துள்ள போதிலும் நேற்று வியாழக்கிழமை காலை வரை 19 032 பேர் குணமடைந்துள்ளதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. அதற்கமைய நேற்றும் 728 பேர் குணமடைந்துள்ளனர்.