இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கொவிட் தொற்றினால் 5 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இவ்வாறு பதிவான 5 மரணங்களில் ஒரு பெண்ணும் 4 ஆண்களும்  உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 129 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றால் உயிரிழந்த பெண் கொலன்னாவை பகுதியைச் சேர்ந்தவர் எனவும், நான்கு ஆண்களும் கொழும்பு 02, கொழும்பு 10 மற்றும் கொழும்பு 12 ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொலன்னாவையில் இறந்த பெண் 56 வயதுடையவெரனவும், கொழும்பு 12 பகுதியில் மரணித்த ஆண் 89 வயதுடையவரெனவும் கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த இரு ஆண்களில் ஒருவர் 85 வயதுடையவரெனவும் மற்றையவர் 71 வயதுடையவரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பு 2 பகுதியைச் சேர்ந்த 78 வயதுடைய ஆணொருவரும் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 25,760 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை  19,032 ஆக அதிகரித்துள்ளது.

433 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளதுடன் 6,604 பேர் தொடர்ந்தும்  வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இலங்கையில், 129 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.