(எம்.மனோசித்ரா)

கொரோனா பரவல் நிலைமையைக் கருத்திற் கொண்டு இவ்வாண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரணதர பரீட்சைகளை 2021 மார்ச் மாதத்தில் நடத்த எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பிரீஸ் தெரிவித்தார்.

பிரதேச அடிப்படையில் 10 பல்கலைக்கழங்கள் - ஜி. எல். பீரிஸ் | Virakesari.lk

பாடசாலைகளை நடத்திச் செல்லல் மற்றும் தேசிய பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையிலான ஊடகவியலாளர் சந்திப்பு கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித மற்றும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோரின் பங்குபற்றலுடன் இன்று வியாழக்கிழமை இணையவழியூடாக இடம்பெற்றது. 

இதன் போதே அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் கூறுகையில்,

இம்முறை 621 000 பேர் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். கொரோனா தொற்றின் காரணமாக வழமையைப் போன்று டிசம்பர் மாதத்தில் பரீட்சையை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டதால் , 2021 ஜனவரி 18 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை பரீட்சையை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் நாட்டில் இரண்டாம் கொரோனா அலை ஏற்பட்டதால் மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளை விரைவில் திறக்க முடியாத நிலைமை காணப்படுகிறது.

நாடளாவிய ரீதியில் உள்ள 10 165 பாடசாலைகளில் 5100 பாடசாலைகள் மாத்திரமே நவம்பர் 23 ஆம் திகதி முதல் திறக்கப்பட்டுள்ளன. அதற்கமைய 11 ஆம் வகுப்பினைக் கொண்டுள்ள மொத்த பாடசாலைகளில் சுமார் 50 சதவீதமானவை மாத்திரமே திறக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு 50 வீத பாடசாலைகளை மூடப்பட்டுள்ள இந்நிலையில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தினத்தில் பரீட்சையை நடத்த முடியாது. காரணம் கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு 1 தொடக்கம் 15 வரையான பிரதேசங்களில் மாத்திரம் 154 பரீட்சை நிலையங்களில் 24 600 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். இவ்வாறான நிலையில் மாணவர்களின் சுகாதார சுகாதார பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்த முடியும் என்று கூற முடியாது.

இதற்கு மாற்று வழியாக மேலதிக பரீட்சை நிலையங்களை அமைப்பது பற்றியும் ஆராய்ந்தோம். ஆனால் அந்த விடயம் நடைமுறை சாத்தியமற்றது என்பது தெளிவாகியுள்ளது. சாதாரண தர பரீட்சைகளை நடத்துவதற்கு 9 நாட்கள் மாத்திரமே தேவைப்படும். எனினும் உயர்தர பரீட்சைகளை நடத்துவதற்கு இம்முறை 21 நாட்கள் எடுத்தது.

அவ்வாறு பாதுகாப்பான வகையில் பரீட்சைகளை நடத்துவதற்காக அந்த 9 நாட்கள் எப்போது கிடைக்கும் என்று சிந்தித்தே, மார்ச்சில் அதனை நடத்த தீர்மானித்தோம். அத்தோடு 3 மாதங்களில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடவும் எதிர்பார்த்துள்ளோம். அதற்கமைய ஜூன் மாதத்தில் பெறுபேறுகளை வெளியிட்டால் , ஜூலையில் உயர்தர வகுப்புக்களை ஆரம்பிக்கலாம். அவ்வாறு செய்தால் மாணவர்களுக்கு நெருக்கடி ஏற்படாது.

இவ்வாறு முறையான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதே வேளை விடைத்தாள் திருத்தும் நிலையங்களில் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நவடிக்கைகளை எடுப்பதற்கும் , விடைத்தாள்களை திருத்துபவர்களுக்காக கொடுப்பனவு , போக்குவரத்து செலவுக்காக கொடுப்பனவு என்பவற்றை அதிகரிப்பதற்கும் 10 000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவை தவிர ஏனைய 35 அரச பரீட்சைகளையும் நடத்த வேண்டியுள்ளது. இது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

ஊவா மாகாணத்தில் கடந்த வாரம் மாணவர்கள் வருகை 71 வீதமாக பதிவாகியுள்ளது. ஏனைய பாடசாலைகளிலும் 50 வீதத்திற்கும் அதிக வருகை பதிவாகியுள்ளது. எனவே பெற்றோர் நம்பினால் , பாடசாலை நிர்வாகம் உரிய ஆலோசனைகளுடன் நடவடிக்கைகளை முன்னெடுத்தால் மாணவர்களின் வருகை 50 வீதத்தை தாண்டினால் முழு நாட்டிலும் பாடசாலைகளை மூடுவது பொறுத்தமற்றது. எனவே முழு நாட்டிலும் பாடசாலைகளை மூட எதிர்பார்க்கவில்லை.  

பாடசாலைகளை ஆரம்பித்த தீர்மானம் தோல்வியடைந்துள்ளதாகக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. பெரும்பாலான பாடசாலைகளில் 70 வீத வருகை இருக்கும்போது எவ்வாறு அனைத்து பாடசாலைகளையும் மூடுவது? சுகாதார வசதிகளுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. அதிபர்கள் , வலய கல்வி பணிப்பாளர்களிடம் பேசிய பின்னரே தீர்மானிக்கப்பட்டது என்றார்.

கல்வி அமைச்சின் செயலாளர்,

இதன் போது கருத்து தெரிவித்த கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா ,

உயர் தர பரீட்சைகள் நடந்த போது மினுவாங்கொடை , கம்பஹா, நீர்கொழும்பு, கந்தான உள்ளிட்ட 18 பொலிஸ் பிரிவுகள் மாத்திரமே முடக்கப்பட்டிருந்தன. ஒக்டோபர் 4 ஆம் திகதி மினுவாங்கொடை கொத்தணி இனங்காணப்பட்டது. எனினும் அதற்கு முன்னரே ஒக்டோபர் 11 ஆம் திகதி பரீட்சையை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்ததால்  மாணவர்களும் பெற்றோரும் அதற்கு தயாராக இருந்தனர். அதற்கமையவே எம்மால் பரீட்சைகளை நடத்தக் கூடியதாக இருந்தது.

வழமையாக டிசம்பர் மாதம் பரீட்சை இடம்பெற்று ஏப்ரலில் பெறுபேறு வெளியிடப்படும். மே அல்லது ஜூன் மாதமளவில் மேலதிக வகுப்பு ஆரம்பமாகும். இம்முறை அது மாத்திரம் சற்று மாறுபடும். எவ்வாறிருப்பினும் மாணவர்களின் சார்பில் சிந்தித்தே தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.