‘கொடுத்த வாக்கை என்றைக்கும் காப்பாற்றுவேன்’ என ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது..

‘2017ஆம் ஆண்டில் அரசியலுக்கு வருவேன் என கூறியிருந்தேன். பாராளுமன்ற தேர்தலில் முடிவு செய்யவில்லை. சட்டசபை தேர்தல் நெருங்குவதற்கு முன்னால், கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என கூறியிருந்தேன். மக்கள் மத்தியில் எழுச்சி வரவேண்டும். எழுச்சியை உண்டாக்க வேண்டும். அதன் பிறகுதான் கட்சியை ஆரம்பித்து, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்தேன். 

ஆனால் கொரோனாவால் முடியவில்லை. எனக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது உங்களுக்குத் தெரியும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் சுற்றுப்பயணம் செல்வது ஆபத்து என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். 

நான் பிரச்சாரம் செய்ய முடியும் என நம்பினேன். தமிழக மக்களின் பிரார்த்தனை மற்றும் வேண்டுதலால் ஒரு முறை உயிர் பிழைத்து வந்தேன். இப்போது அவர்களுக்காக என் உயிரே போனால் கூட என்னை விட சந்தோசப் படுபவர் வேறு யாரும் கிடையாது. நான் எப்போதும் கொடுத்த வாக்கை என்றைக்கும் காப்பேன்.

அரசியல் மாற்றம் ரொம்ப கட்டாயம். அது காலத்தின் தேவையும் கூட. அரசியல் மாற்றம் வந்தே ஆகவேண்டும். நான் வந்த பிறகு நிச்சயம் மாற்றம் பிறக்கும். நான் வெற்றி அடைந்தால் அது மக்களுடைய வெற்றி. நான் தோல்வி அடைந்தால் அது மக்களுடைய தோல்வி. மாற்றத்திற்கு எல்லாரும் துணையாக நிற்க வேண்டும். எல்லாத்தையும் மாற்ற வேண்டும். கடினமாக உழைத்து நம்மால் என்ன முடியுமோ... அதை செய்து எனது பாதையின் வெற்றி அடைவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

‘அண்ணாத்த’ படத்தை முடித்துக் கொடுப்பது என் கடமை. அதை முடித்துவிட்டு கட்சி பணியை ஆரம்பிப்பேன். ஒவ்வொரு நாட்டிற்கும் தலையெழுத்து உள்ளது. தமிழக தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது. அது நிச்சயம் நடக்கும். ஆட்சி மாற்றம் அரசியல் மாற்றம் இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை. மாற்றுவோம். எல்லாவாற்றையும் மாற்றுவோம்.” என்றார். 

இந்நிலையில் புதிதாக தொடங்கவிருக்கும் கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனை நியமித்திருப்பதாகவும், அர்ஜுன மூர்த்தி என்பவரை கட்சியின் ஒருங்கிணைப்பாளராக நியமித்திருப்பதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார் .

இதனிடையே ரஜினிகாந்த் தொடங்கவிருக்கும் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் அர்ஜுனமூர்த்தி நேற்று தமிழக பாஜக கட்சியின் மாநில அளவிலான பதவியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.