நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக் காரணமாக ஆறு மாவட்டங்களில் 3, 575 குடும்பங்களைச் சேர்ந்த 12, 252 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் 15 வீடுகள் முழுமையாகவும் 192 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் இன்று பிற்பகல் 12 மணிவரையில் பதிவுசெய்யப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டே அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
மன்னார் மாவட்டம்

மன்னார் மாவட்டத்தின் நானாட்டான், மாந்தை மேற்கு, முசலி, மடு மற்றும் மன்னார் நகரம் ஆகிய பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் 2,236 குடும்பங்களைச் சேர்ந்த 7, 749 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இங்கு 6 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 1,778 குடும்பங்களைச் சேர்ந்த 6,795 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

யாழ்ப்பாணம் மாவட்டம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கரவெட்டி, சங்கானை, தெல்லிப்பழை, யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய், மருதங்கேணி, சாவகச்சேரி, நெடுந்தீவு, உடுவில், பருத்தித்துறை மற்றும் வேலணை பிரதேச செயலாளர் பிரிவுகளில் 829 குடும்பங்களைச் சேர்ந்த 2, 986 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கு அனர்த்தம் காரணமாக நால்வர் காயமடைந்துள்ள நிலையில் ஒருவர் காணாமலும் போயுள்ளனர்.

15 வீடுகள் முழுமையாகவும் 152 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதுடன், 139 குடும்பங்களைச் சேர்ந்த 539 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

கிளிநொச்சி மாவட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

 

முல்லைத்தீவு மாவட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், துணுக்காய், மாந்தை கிழக்கு மற்றும் மணலாறு பிரதேச செயலாளர் பிரிவுகளில் 405 குடும்பங்களைச் சேர்ந்த, 1,149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கு ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 130 குடும்பங்களைச் சேர்ந்த 444 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

வவுனியா மாவட்டம் 

வவுனியா மாவட்டத்தில் வவுனியா, வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு மற்றும் வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவுகளில் 74 குடும்பங்களைச் சேர்ந்த 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கு ஐந்து வீடுகள் சேதமடைந்துள்ளது.

 

திருகோணமலை மாவட்டம்

திருகோணமலை மாவட்டத்தில் வெருகல், கந்தளாய், சேருவிலை, மொரவெவ, குச்சவெளி, கிண்ணியா, தம்பலகாமம், பதவிசிறிபுர மற்றும் திருகோணமலை பிரதேச செயலாளர் பிரிவுகளில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 91 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கு 19 வீடுகள் பகுதிளவில் சேதமடைந்துள்ளதுடன், 864 குடும்பங்களைச் சேர்ந்த 2,558 பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.