(செ.தேன்மொழி)
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது துப்பாக்கி, துப்பாக்கி ரவைகள் மற்றும் கைக்குண்டு என்பவற்றுடன் வெவ்வேறு பிரதேசங்களில் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

யக்கமுல்ல - மினுவந்தெனிய பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட குழல் 12 ரக துப்பாக்கியுடன் கராகொட பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, பதுளை - பந்துலுபிட்டி பகுதியில் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது மித்தெனிய பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய சந்தேக நபரொருவர் உள்நாட்டு துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து துப்பாக்கி, குழல் 12 ரக துப்பாக்கி தோட்டாக்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஹொரவபொத்தானை பகுதியில் வெளிநாட்டு கைக்குண்டுடன் மொரகேவ பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு எதிராக ஏற்கனவே நீதிவான் நீதிமன்றத்தில் பிடியாணை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.