(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை அண்மித்துள்ளது. அத்தோடு மரணங்களின் எண்ணிக்கையும் 120 ஐ கடந்துள்ளது. 

நேற்று இரவு அரசாங்க தகவல் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்ட 4 மரணங்களில் 3 மரணங்கள் வீட்டிலேயே பதிவாகியுள்ளன.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக கொழும்பு மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஓரளவு குறைவடைந்திருந்த போதிலும் நேற்று மீண்டும் இம்மாவட்டத்தில் 200 இற்கும் அதிக தொற்றாளர்கள் இனங்காணகப்பட்டனர்.

இதேவேளை கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சுகாதார தரப்பினரால் எச்சரிக்கப்பட்டிருந்தமைக்கமைய களுத்துறையில் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

நேற்று இம்மாவட்டதில் கம்பஹாவை விட அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இன்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்

இந்நிலையில் இன்று புதன்கிழமை மாலை 7 மணி வரை 350 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய நாட்டில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 882 ஆக உயர்வடைந்துள்ளது. இவ்வாறு இனங்காணப்பட்டுள்ள மொத்த தொற்றாளர்களில் 18 304 பேர் குணமடைந்துள்ளதோடு 6456 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்தோடு மரணங்களின் எண்ணிக்கையும் 122 ஆக உயர்வடைந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை பதிவான மரணங்கள்

கொழும்பு 12 ஐ சேர்ந்த 74 வயதுடைய ஆணொருவர் கடந்த 29 ஆம் திகதி வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். கொவிட் தொற்று தீவிரமடைந்ததன் காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.

கொலன்னாவையைச் சேர்ந்த 74 வயதுடைய பெண்ணொருவர் கடந்த 29 ஆம் திகதி வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். மூளைக்கு இரத்தம் செல்லல் பாதிப்படைந்த நிலையில் கொவிட் தொற்றுக்கும் உள்ளானமை இவரது மரணத்திற்கான காரணமாகும்.

ராஜகிரியவைச் சேர்ந்த 93 வயதுடைய பெண்ணொருவர் கடந்த 28 ஆம் திகதி வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். கொவிட் தொற்றுடன் இரத்தம் விசத்தன்மையானமை இவரது மரணத்திற்கான காரணமாகும்.

கொழும்பு 10 ஐ சேர்ந்த 81 வயதுடைய ஆணொருவர் தனியார் வைத்தியசாலையொன்றில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து முல்லேரியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது கடந்த 30 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். 

நாட்பட்ட நுரையீரல் நோய் மற்றும் கொவிட் தொற்றுக்கும் உள்ளானமை இவரது மரணத்திற்கான காரணமாகும்.

கம்பஹாவை விட களுத்துறையில் அதிக தொற்றாளர்கள்

நேற்று செவ்வாய்க்கிழமை நாட்டில் 545 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இவர்களில் 294 பேர் கொழும்பிலும் , 130 பேர் களுத்துறையிலும் 22 பேர் கம்பஹாவிலும் ஏனையோர் ஏனைய மாவட்டங்களிலும் இனங்காணப்பட்டுள்ளனர்.

செவ்வாயன்று கம்பஹாவில் 22 தொற்றாளர் மாத்திரமே பதிவான நிலையில் களுத்துறையில் 130 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

மஹர சிறைச்சாலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கும் தொற்று

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற அமைதியற்ற நிலையால் உயிரிழந்த 11 கைதிகளில் 9 பேருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக ராகம வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் சடலத்தில் பெறப்பட்ட மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் குறித்த 9 பேருக்கும் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.