புரவி சூறாவளி கரையை அண்மித்துள்ளது எனவும் அது இன்னும் 2 மணித்தியாலங்களில் முல்லைத்தீவை அண்மித்த கரையை கடக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கரையோரங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேநேரம் சூறாவளியால் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கான நிவாரணங்களை வழங்வதற்கான நிதி ஒதுக்கங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்று இரவு 7 மணிக்கும் 10 மணிக்கும் இடையில் புரவி சூறாவளி, திருகோணமலைக்கும், பருத்தித்துறைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் தரைதொட்டு, முல்லைத்தீவு ஊடாக மன்னார் வரையில் செல்லும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, கிழக்கு கடற்பரப்பில் இருந்து தீவுக்குள் பிரவேசிக்கின்ற புரவி சூறாவளியின் காரணமாக, மின்சார விநியோகத்துக்கு தடங்கல்கள் ஏற்படுமாக இருந்தால், அதனை சீர்செய்வதற்காக பாதிக்கப்படக்கூடிய பகுதிகளுக்கு மேலதிக மின்சார ஊழியர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மாழை மற்றும் காற்று காரணமாக தற்போது வரை 156 குடும்பங்களை சேர்ந்த 586 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

சூறாவளியின் பாதிப்புகளை குறைத்துக் கொள்ளும் வகையில், கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான இராணுவ கட்டளைத் தளபதிக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஒய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

புரவி சூறாவளியிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்டத்தில்  237 தற்காலிக இடைத்தங்கல் நிலையங்கள் இதுவரை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 21820 குடும்பங்களை சேர்ந்த  75000 அங்கத்தவர்கள் தங்க முடியும்.

குறிப்பாக கரையோரங்களில் உள்ள மக்களைப் பாதுகாக்க அவர்களை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடைத்தங்கல் நிலையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக  திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 10 குடும்பங்களை சேர்ந்த 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  9 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளதாகவும் மாவட்ட இடர் முகமைத்துவ புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

புரவிப் புயலின் தாக்கம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று அதிகாலை தொடக்கம் தொடர்ச்சியாக மழைவீழ்ச்சி அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.காற்றின் வேகமும் தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றது. 

தொடர்சியாக கடல் அலையின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதேவேளை கரையோரப் பகுதிகளில் இருக்கும் மக்களை பாதுகாப்பான இடத்தை நோக்கி நகர்த்தும் நடவடிக்கையில் பிரதேச செயலகங்கள் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.