வெள்ளவத்தையில் 140 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறும் தெரிவித்து வட்சப் சமூவலைத்தளத்தில் செய்தியொன்று இன்று பரவியிருந்தது.

இதனை பொது மக்களின் பாதுகாப்புக் கருதியே பொலிஸார் வெளியிட்டுள்ளதாகவும் குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இச் செய்தியில்  

வெள்ளவத்தை மயூரா வீதி மற்றும் அதனை அண்டிய தொடர்மாடிப்பகுதியில் 11 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர் எனவும், வின்சன்ட் வீதி, கோகிலா வீதி, ஸ்ரீ விஜய வீதி ஆகிய பகுதிகளில் 64 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அத்தோடு ஸ்டெபேர்ட் வீதி பகுதியில் 6 தொற்றாளர்களும் ரோஹிணி வீதியை அண்டிய பகுதியில் 4 தொற்றாளர்களும் தர்மாராம வீதியை அண்டிய பகுதியில் ஒரு தொற்றாளரும் நஸீர் தோட்டத்தில் 7 பேரும் சைலென்ஸர் தோட்டத்தில் 3 பேரும் சுவர்ண வீதியில் 3 பேருமாக மொத்தம் 140 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை கிருலப்பனை பொலிஸ் பிரிவிலும் 106 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும்  அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடர்பில், நாம் முற்பகல் வேளையில் பொலிஸாரிடம் வினவிய போது, 

இச் செய்தி பொலிஸாரினால் உறுதிசெய்யப்பட்டிருந்தது.

எனினும் பின்னர் சமூக வலைத்தளங்களில் குறித்த செய்தி தொடர்பில் முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் வெளிவந்தன.

இதேவேளை, மீண்டும் இது குறித்து பொலிஸாரிடம் கேட்டபோது அவர்கள் கருத்துக்கூற மறுத்துவிட்டனர்.