(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தவர்களை துப்பாக்கி சூடு நடத்தி கொலை செய்தது ஒருபோதும் ஏற்றுகொள்ள முடியாத விடயமாகும். இது அரசாங்கத்தின் மிலேச்சத்தனமான  செயற்பாட்டை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக சபையில் தெரிவித்தார். கொல்லப்பட்ட அனைவருக்கும் கொவிட் வைரஸ் இருப்பதாக கூறி அவர்களின் உடல்களை 24 மணிநேரத்திற்குள் எரித்து உண்மைகளை புதைத்துவிட அரசாங்கம் முயற்சிக்கும் என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் கூறினார்.

மேலும், மஹர சிறைச்சாலை கலவரத்தை கட்டுப்படுத்த எடுத்த முயற்சியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் சிறைச்சாலைக்குள் எட்டு கைதிகள் கொல்லப்பட்டதாகவும், காயமடைந்த நபர்களில் ஒருவர் நேற்று அதிகாலை வைத்தியசாலையில் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 107 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் புதிய அறிக்கை தெரிவிக்கின்றது. அரசாங்கத்தின் பொறுப்பில் இருந்த ஒன்பது கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர். 100 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஒரு சிலர் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் சிறைச்சாலையில் இருந்து கைதிகள் சிலர் தப்பிக்க எடுத்த முயற்சியாக ஒருசிலர் கூறுகின்றனர். வித்தியாசமான போதை மாத்திரைகளை பாவித்ததால் ஏற்பட்ட கலவரம் எனவும் ஒரு சிலர் கூறுகின்றனர். இது குறித்த உண்மை, பொய் என்ன என்பதை விசாரணைகளின் மூலமாக கண்டறிய வேண்டும்.

ஆனால் கொவிட் -19 வைரஸ் தொற்று  சிறைச்சாலைக்குள் பரவியதை அடுத்து, கடந்த சில நாட்களாகவே கைதிகள் இடையில் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது. சிறைச்சாலைகளுக்குள்  மாத்திரம் ஆயிரத்திற்கும் அதிகமான கொவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் நேற்று சபையில் தெரிவித்தார். 2020 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் அறிக்கையின் பிரகாரம் நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் 11 ஆயிரத்து 792 கைதிகளுக்கான இட வசதிகள் இருப்பதாக கூறுகின்ற போதிலும் இப்போது வரையில் 28 ஆயிரத்து 750 பேர் சிறைகளில் உள்ளனர். இது நூறுக்கு இருநூறு ஐம்பது வீத அதிகரிப்பாகும். இந்த கைதிகளில் 20 ஆயிரம் பேர் விளக்கமறியல் கைதிகள் என தெரிவிக்கப்படுகின்றது. மஹர சிறைச்சாலையை எடுத்துக்கொண்டால் 80 வீதமானவர்கள் விளக்கமறியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் குற்றவாளிகள் என எந்தவொரு நீதிமன்றத்திலும் உறுதிப்படுத்தப்படவில்லை.

அரசாங்கத்தின் பொறுப்பில் உள்ளவர்களை துப்பாக்கி சூடு நடத்தி கொள்வது இதற்கு முன்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் இடம்பெற்றுள்ளது. இப்போதும் ஒன்பது பேரை அரசாங்கம் கொண்றுள்ளது. இலங்கை அரசாங்கமாக முன்னெடுக்கும் இந்த செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தவர்களை கொலைசெய்தது ஒருபோதும் ஏற்றுகொள்ள முடியாத விடயமாகும். அரசாங்கத்தின் மிலேச்சத்தனமான   செயற்பாட்டை இது வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இவ்வாறான கொலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த கொலைகள் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றதா? விசாரணை அறிக்கை இந்த சபைக்கு சமர்பிக்கப்படுமா? கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் மீண்டும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றாத வண்ணம் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை என்ன? சிறைச்சாலைகளுக்குள் கொவிட் -19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கை என்ன? சிறைச்சாலைகள் சட்ட ஒழுங்குகளுக்கு அமைச்சர் கொல்லப்பட்ட சகல கைதிகள் தொடர்பில் மரண விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆகவே மரண விசாரணை நடத்தப்படுமா? கொல்லப்பட்டவர்களின் உடல்களை அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுமா? இப்பொது எழுகின்ற சந்தேகம் என்னவென்றால், கொல்லப்பட்ட அனைவருக்கும் கொவிட் வைரஸ் இருப்பதாக கூறி அவர்களின் உடல்களை 24 மணிநேரத்திற்குள் எரித்து உண்மைகளை புதைத்துவிட முயற்சிகள் எடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் உள்ளது.