(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
பல்கலைக்கழக உபவேந்தர் நியமனங்கள் அரசியல் நியமனங்களாக மாறியுள்ளது. இது கல்விக்கு உகந்த செயற்பாடு அல்ல. எனவே அரசாங்கம் இந்த விடயங்களில் கூடிய கவனம் எடுத்து மாணவர்களின் கல்விக்காக தீர்மானம் எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் சபையில் தெரிவித்தார். பொத்துவில் பிரதேச கல்வி வலயத்தை  தனி கல்வி வலயமாக உருவாக்கவேண்டும் எனவும் அவர் கூறினார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், பொத்துவில் பிரதேச கல்வி வலய  பிரச்சினை குறித்து நீண்டகாலமாக பேசிக்கொண்டுள்ளோம். இது அக்கரைப்பற்று கல்வி வலயத்துடன் இணைக்கப்பட்டுள்ள காரணத்தினால் நீண்டதூரம் மாணவர்கள் பயணிக்க வேண்டியுள்ளது. எனவே இதற்கான தனி கல்வி வலயம் உருவாக்கப்பட வேண்டும். இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் இன்னமும் தீர்வுகள் வழங்க முடியாத நிலைமை உள்ளது. குறைந்த பட்சம் 50 பாடசாலைகள் இருக்க வேண்டும் என்ற நியதியை தாண்டி  இதனை கருத்தில் கொள்ள வேண்டும். அடிப்படை பிரச்சினைகளை கருத்தில் கொண்டே இதனைக் கூறுகின்றோம்.

அதேபோல் கண்டி மாவட்டத்தில் உள்ள தேசிய பாடசாலைகளில் கூட பௌதீக மற்றும் ஆளணி பிரச்சினைகள் நிலவுகின்றது. இரண்டு மூன்று தசாப்தங்களாக புதிய கட்டிடங்கள் கூட வழங்கப்படாத நிலைமை காணப்படுகின்றது. அனர்த்தங்கள் காரணமாக பாடசாலைகள் உடையும் அச்சம் நிலவுகின்றது. எனவே புதிய கட்டிடங்கள் உருவாக்கப்பட வேண்டும்.  மேலும் இன்று பல்கலைக்கழக உபவேந்தர் நியமனங்கள் அரசியல் நியமனங்களாக மாற்றியுள்ளது. இது கல்விக்கு உகந்த செயற்பாடு அல்ல. எனவே அரசாங்கம் இந்த விடயங்களில் கூடிய கவனம் எடுத்து மாணவர்களின் கல்விக்காக தீர்மானம் எடுக்க வேண்டும். அதேபோல் தொழிநுட்ப கல்வி என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆனால் அரசாங்கம் இந்த துறையை கவனத்தில் கொள்ளவில்லை என்றே தெரிகின்றது. தொழிநுட்ப கல்விக்கான ஒதுக்கீடுகள் கூட குறைவானது.