(ரொபட் அன்டனி)

இனவாதத்தை முன்னிறுத்தி  பாதயாத்திரை முன்னெடுக்கப்படுகின்றது என்பதற்காக   அரசியல் தீர்வு காணும்  செயற்பாட்டில்   தடைகளோ முட்டுக்கட்டைகளோ ஏற்பட்டுவிடும் என்று  தமிழ் பேசும் மக்கள் அச்சம் கொள்ள வேண்டியதில்லை.  புதிய அரசியலமைப்பை  உருவாக்கி அதனூடாக தீர்வுத்திட்டத்தை முன்வைக்கவே   தேசிய அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் அமைச்சருமான  டிலான் பெரெரா தெரிவித்தார். 

கூட்டு எதிரணியின் பாதயாத்திரைக்கு எவ்விதமான இலக்கும் இல்லை.   எவ்விதமான இலக்குகளும் இல்லாமல் ஏன் இவ்வாறான போராட்டத்தை செய்கின்றனர் என்று புரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 

பாதயாத்திரை விவகாரம் தொடர்பில் விபரிக்கையிலேயே  மேற்கண்டவாறு அமைச்சர் டிலான் பெரெரா  கூறினார்.  

அமைச்சர்  இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்  

கூட்டு எதிரணியின் பாதயாத்திரைக்கு எவ்விதமான இலக்கும் இருப்பதாக தெரியவில்லை.   இவ்வாறான  பாதயாத்திரையை  முன்னெடுத்து ஒருபோதும்  அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது. காரணம் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம்  நான்கரை வருடங்களுக்கு முன்னர்   பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்க முடியாது.  

அதற்கு முன்னர் ஜனாதிபதி  தேர்தலும்   நடைபெறாது.  அடுத்த ஜனாதிபதி தேர்தலில்  முன்னாள் ஜனாதிபதிகளான  சந்திரிகா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் போட்டியிடவும் முடியாது.   

எனவே  எவ்விதமான நோக்கமுமின்றி ஏன் இந்த  பாதயாத்திரையை  கூட்டு  எதிரணி முன்னெடுக்கின்றது என்று எங்களுக்கு புரியவில்லை.  வற் வரி அதிகரிப்புக்கு எதிராக  இந்த   பாதயாத்திரை இருக்குமாயின்  ஒரு நியாயம் இருந்திருக்கும். 

ஆனால் இந்த  பாதயாத்திரையில் இனவாதமே  தூண்டப்படுகின்றது.   புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிக்கு எதிராக  கோஷமிடுகின்றனர்.   இதன்மூலம் எதனை அடையப்போகின்றனர் என்று புரியவில்லை.     ஆனால் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என்பது நிச்சயமாகும். 

மேலும் இந்த பாதயாத்திரை மூலம்  ஐக்கிய தேசிய கட்சியின் தேவை நிறைவேற்றப்படுகின்றதா? என்ற சந்தேகமும் எழுகின்றது.  சிறிலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடுவதை ஐக்கிய தேசிய கட்சி விரும்பும்.    எனவே இவ்வாறு  செய்வதன் ஊடாக  மறைமுகமாக    ஐக்கிய தேசிய கட்சியின் தேவையை கூட்டு எதிரணி நிறைவேற்றுகின்றதா? என்ற  சந்தேகம் எங்களுக்கு ஏற்படுகின்றது.  

ஆனால்  ஒரு விடயத்தை இங்கு மிகவும் உறுதியாக பதிவு செய்கின்றேன். அதாவது இனவாதத்தை முன்னிறுத்தி  பாதயாத்திரை முன்னெடுக்கப்படுகின்றது என்பதற்காக   அரசியல் தீர்வு காணும்  செயற்பாட்டில்   தடைகளோ முட்டுக்கட்டைகளோ ஏற்பட்டுவிடும் என்று  தமிழ் பேசும் மக்கள் அச்சம்கொள்ளவேண்டியதில்லை.  புதிய அரசியலமைப்பை  உருவாக்கி அதனூடாக தீர்வுத்திட்டத்தை முன்வைக்கவே   தேசிய அரசாங்கம்  அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது. 

அந்த உயரிய நோக்கத்துக்காகவே   தேசிய அரசாங்கம் என்ற எண்ணக்கரு செயற்படுகின்றது.    எனவே   அரசியல் தீர்வு குறித்த நம்பிக்கையை கைவிட்டுவிடவேண்டாம் என்பதனை   அனைத்து தரப்பினருக்கும்   தெரிவிக்கின்றேன்.  தயவு செய்து நம்பிக்கையிழந்துவிடவேண்டாம்.  நம்பிக்கையுடன் இருங்கள்.    தேசிய அரசாங்கத்தின்  ஊடாக தீர்வைப் பெற்றுக்கொடுக்க  நடவடிக்கை எடுப்போம் என்றார்.