(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

கிழக்கு மாகாணத்தில் கல்வி தொடர்பான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு விகிதாசார அடிப்படையில் மேற்கொள்வதனால் தமிழ் மக்கள் மிகப்பெரும் பாதிப்பை எதிர்கொள்வதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் எம்.பி. த.கலையரசன் சபையில்  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை 2021 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் கல்வி அமைச்சு, இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

கிழக்கு மாகாணத்தில் பல பகுதிகள் இன்னும் யுத்தப்பாதிப்பிலிருந்து மீளவில்லை. அதேபோன்று பல பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் மீளக் குடியேறவும் இல்லை. அத்துடன் பெருமளவானோர் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்று விட்டனர். கிழக்கிலிருந்து ஒன்றரை இலட்சம்பேர் வரையில் இந்தியாவில்  அகதிகளாகவுள்ளனர். இவர்களை மீளவும் அழைத்துவர நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் கிழக்கு மாகாணத்தில் கல்வி தொடர்பான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு விகிதாசார அடிப்படையில் மேற்கொள்வதனால் தமிழ் மக்கள் மிகப்பெரும் பாதிப்பை எதிர்கொள்கின்றனர்.

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மொழிமூல பாடசாலைகள் 98 உள்ளன. இவற்றில் நாவிதன்வெளி கல்முனை வலயத்தில்  48 பாடசாலைகளை உ ள்ளடக்கி தனியான கல்வி வலயம் ஒன்றை உருவாக்க நாம் மாகாண சபை  ஊடாக தீர்மானமெடுத்து அதனை கல்வி அமைச்சின் அனுமதிக்காக அனுப்பிய போதும் அதற்கான அனுமதி இன்றுவரை கிடைக்கவில்லை.

மட்டக்களப்பில் கூட மட்டக்களப்பு மத்தி  என்ற தனி வலயம் உருவாக்கப்பட்டு அது  மிகவும் சிறப்பாக செயற்படுகின்றது. எனவே நாவிதன்வெளி கல்முனை வலயத்தில்  48 பாடசாலைகளை உள்ளடக்கி தனியான கல்வி வலயம் ஒன்றை உருவாக்க கல்வி அமைச்சு  அனுமதியளிக்க வேண்டும்.

இதேவேளை எமது பகுதிகளுக்கு வரும் அபிவிருத்திகளை தடுத்து நிறுத்தி வேறுபகுதிகளுக்கு திருப்பும் வேலைகளும் இடம்பெறுகின்றன. எமது பகுதிகளிலுள்ள பாடசாலைகளிலுள்ள கட்டிடங்கள் மிகப்பழமையானவை .70,75 வருடங்களுக்கு  முற்பட்டவை.

மாணவர் ஒன்று கூடல் நடந்தபோது பாடசாலைக்கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவமும் நட ந்துள்ளது. எனவே  எமது பகுதி பாடசாலைக் கட்டிடங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்த வேண்டும். எமது பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்கு வரும் ஆசிரியர்கள் சிறிது நாட்களிலேயே அரசியல்வாதிகளின் செல்வாக்கைப் பயன்படுத்தி நகர்ப்புற பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்று சென்று விடுகின்றனர். இதனால் பின்தங்கிய பிரதேச பாடசாலைகள் பாதிப்பை எதிர்கொள்கின்றன .இதுதொடர்பிலும்  கல்வி அமைச்சு கவனம் செலுத்த வேண்டும் என்றார்.