திசர - தனஞ்சயவின் அதிரடியுடன் யாழ்ப்பணம் ஸ்டாலியன்ஸுக்கு ஹெட்ரிக் வெற்றி!

Published By: Vishnu

02 Dec, 2020 | 09:17 AM
image

லங்கா பிரீமியர் லீக் தொடரில் கண்டி டஸ்கர்ஸ் அணியை 54 ஓட்டங்களினால் வீழ்த்தி யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணி மூன்றாவது வெற்றியை பதிவுசெய்துள்ளது.

லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு : 20 கிரிக்கெட் தொடரின் எட்டாவது போட்டி நேற்றிரவு ஹம்பாந்தோட்டை, சூரியவெவ மைதானத்தில் குசல் ஜனித் பெரேரா தலைமையிலான கண்டி டஸ்கர்ஸ் மற்றும் திசர பெரோரா தலைமையிலான யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணிகளுக்கிடையில் ஆரம்பமானது. 

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் அணியானது முதல் 10 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 50 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறியது.

எனினும் அதன் பின்னர் தனஞ்சய டிசில்வா மற்றும் திசர பெரேரா ஜோடி சேர்ந்து கண்டி அணியின் பந்து வீச்சுக்களை துவம்சம் செய்தனர். இதனால் அணியின் ஓட்ட எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்தது. 

அதன்படி 15 ஓவர்களின் நிறைவில் யாழ்ப்பாணம் அணியானது 4 விக்கெட் இழப்புக்கு 122 ஓட்டங்களை குவித்ததுடன் 15.2 ஆவது ஓவரில் திசர பெரேரா அரை சதத்தை பூர்த்தி செய்ய, அதே ஓவரில் தனஞ்சய டிசில்வா இரு சிக்ஸர்களையும், இரு பவுண்டரிகளையும் விளாசி அதிரடியாக அரைசதம் கடந்தார்.

இவர்களின் இணைப்பாட்டத்தினால் யாழ்ப்பாணம் அணியானது இலகுவாக 200 ஓட்டங்களை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டபோதிலும் 18 ஆவது ஓவரின் இரண்டாவது பந்து வீச்சில் திசர பெரேரா மொத்தமாக 28 பந்துகளை எதிர்கொண்டு 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கலாக 68 ஓட்டங்களை பெற்று நவீன் உல்ஹக்கின் பந்து வீச்சில் சீகுகே பிரசன்னவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

அவரின் வெளியேற்றத்தின் பின்னர் அதே ஓவரின் அடுத்த பந்தில் தனஞ்சய டிசில்வாவும் மொத்தமாக 38 பந்துகளை எதிர்கொண்டு 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கலாக 61 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

இதனால் யாழ்ப்பாணம் அணி 167 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்தது.

அதன் பின்னர் களமிறங்கிய ஏனைய வீரர்கள் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்காது அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேற யாழ்ப்பாணம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 185 ஓட்டங்களை குவித்தது.

பந்து வீச்சில் கண்டி அணி சார்பில் நவீன் உல்ஹாக் 3 விக்கெட்டுகளையும், அசேல குணரத்ன 2 விக்கெட்டுகளையும், நுவான் பிரதீப் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினார்.

186 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கண்டி அணியானது 17.1 ஓவர்களை மாத்திரம் எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 54 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.

கண்டி அணி சார்பில் பிரண்டன் டெய்லர் 46 ஓட்டங்களையும், குசல் மெண்டீஸ் 20 ஓட்டங்களையும், அசேல குணரத்ன 31 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற, ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்க ஒட்டத்துடனும் டக்கவுட்டுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

பந்து வீச்சில் யாழ்ப்பாண்ம் அணி சார்பில் உஷ்மான் சின்வாரி 3 விக்கெட்டுகளையும், சுரங்க லக்மால், திசர பெரேரா மற்றும் வர்னிந்து ஹசரங்க ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளையும், டுவான் ஆலிவர் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினார்.

போட்டியின் ஆட்ட நாயகனாக திசர பெரேரா தெரிவானார்.

இந்த வெற்றியின் மூலம் யாழ்ப்பாணம் அணியானது தான் எதிர்கொண்டு மூன்று போட்டிகளிலும் வெற்றியை பெற்று 6 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

அதேநேரம் கண்டியானது தான் எதிர்கொண்ட நான்கு போட்டிகளில் மூன்றில் தோல்வியடைந்து 2 புள்ளிகளை மாத்திரம் பெற்று நான்காம் இடத்தில் உள்ளது.

இதேவேளை எல்.பி.எல். தொடரின் ஏழாவது போட்டி நேற்று பிற்பகல் தசூன் சானக்க தலைமையிலான தம்புள்ளை வைக்கிங்ஸ் மற்றும் அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான கொழும்பு கிங்ஸ் அணிகளுக்கிடையே நடைபெற்றது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களை குவித்தது.

அணி சார்பில் தசூன் சானக்க 34 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடங்கலாக 56 ஓட்டங்களையும் சமித் படேல் 30 ஓட்டங்களையும், உபுல் தரங்க 25 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

கொழும்பு அணி சார்பில் பந்து வீச்சில் இசுறு உதான மற்றும் ரஸ்ஸல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், சாமர 2 விக்கெட்டுகளையும், மெத்தியூஸ் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

176 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கொழும்பு அணியானது 18.4 ஓவர்களை மாத்திரம் எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இதனால் தம்புள்ளை அணி 28 ஓட்டங்களினால் இரண்டாவது வெற்றியை பதிவுசெய்தது.

துடுப்பாட்டத்தில் கொழும்பு கிங்ஸ் அணி சார்பில் எவன்ஸ் 33 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கலாக 59 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றார்.

பந்து வீச்சில் தம்புள்ளை அணி சார்பில் சமித் படேல், புஷ்பகுமார, அன்வர் அலி மற்றும் புலினா தரங்கா ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளையும், சச்சிந்து கொலம்பேஜ் மற்றும் மற்றும் கசூன் ராஜித ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் தம்புள்ளை வைக்கிங்ஸ் அணி தொடரின் இரண்டாவது வெற்றியை பதிவுசெய்துள்ளதுடன், 4 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.

கொழும்பு கிங்ஸ் அணியானது தோல்வியடைந்தபோதிலும் 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலேயே உள்ளது.

இதேவேளை இன்றைய தினம் தொடரில் எந்தவொரு போட்டியும் இடம்பெறாத நிலையில் நாளை ஆரம்பமாகும் ஒன்பதாவது போட்டியில் காலி கிளாடியேட்டர்ஸ் அணியும் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணியும் மோதவுள்ளன.

அதேநேரம் 10 ஆவது போட்டியில் தம்புள்ளை வைக்கிங்ஸ் அணியும், கண்டி டஸ்கர்ஸ் அணியும் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35