இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 122ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 74 வயது ஆணொருவர் அவரது இல்லத்தில் கடந்த 29 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

கொலன்னாவை பகுதியைச் சேர்ந்த 74 வயது பெண்ணொருவர் கடந்த 29 ஆம் திகதி அவரது இல்லத்தில் உயிரிழந்துள்ளார்.

ராஜகிரிய பகுதியைச் சேர்ந்த 93 வயது பெண்ணொருவர் அவரது இல்லத்தில் கடந்த 28 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

கொழும்பு - 10 பகுதியைச் சேர்ந்த 81 வயது ஆணொருவர் கடந்த 30 ஆம் திகதி முல்லேரியா வைத்திசாலையில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 24 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில் , இவர்களில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இரண்டாம் அலையின் பின்னர் இனங்காணப்பட்ட தொற்றாளர்களாவர். இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 9000 இற்கும் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். 

இதே வேளை கம்பஹாவில் 6000 இற்கும் அதிகமான தொற்றாளர்களும் களுத்துறையில் ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர். 

இரண்டாம் அலையின் பின்னர் கம்பஹா மற்றும் கொழும்பை அடுத்து தற்போது களுத்துறை மாவட்டம் அபாயமுடையதாகவுள்ளதாக சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர். 

இந்நிலையில் நேற்று புதன்கிழமை 545 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர். அதற்கமைய நாட்டில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 24 532 ஆக உயர்வடைந்துள்ளது. 

இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 17 815 பேர் குணமடைந்துள்ளதோடு , 6593 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்தோடு மரணங்களின் எண்ணிக்கையும் 122 ஆக உயர்வடைந்துள்ளது. 

ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மஹர சிறைக் கைதிகளுக்கு கொரோனா 

மஹர சிறைச்சாலையில் கடந்த 29 ஆம் திகதி ஏற்பட்ட பதற்ற நிலைமையைத் தொடர்ந்து சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட டெப்பிட் அன்டிஜன் பரிசோதனையில் 38 பேருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. 

நேற்று முன்தினம் 26 கைதிகளுக்கும் நேற்று 12 கைதிகளுக்கும் இவ்வாறு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சில கைதிகளது பரிசோதனை முடிவுகள் கிடைக்கவுள்ளதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 

பாராளுமன்ற ஊழியருக்கு தொற்று இல்லை 

பாராளுமன்ற ஊழியர் ஒருவர் சுகயீனமடைந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட டெபிட் அன்டிஜன் பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார். 

எனினும் அவர் 14 நாட்களுக்கு வீட்டிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு , அவர் சேவையாற்றிய அலுவலகம் முழுமையாக கிருமி நீக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 

இதேவேளை தெரிவு செய்யப்பட்ட சில சேவையாளர்களுக்கு எழுமாறான பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதற்கு அமைய, பாராளுமன்ற ஊழியர்கள் 100 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட எழுமாறான பரிசோதனைகளில் எவருக்கும் தொற்றுறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

கொலன்னாவ தபால் அலுவலகம் மூடப்பட்டது

கொலன்னாவ தபால் அலுவலகம் மற்றும் அதனூடாக நிர்வகிக்கப்படும் 06 உப தபாலகங்கள் ஆகியன நேற்று செவ்வாய்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. 

தபால் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித்த ரணசிங்க குறிப்பிட்டுள்ளார். 

கொலன்னாவ தபால் நிலையத்தின் ஏனைய ஊழியர்களுக்கும் பி.சி.ஆர். பரிசோதனையை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.