( எம்.எப்.எம்.பஸீர்)

மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதியாக இருந்த  எம்.எச்.டி.ஏ. நவாஸ், மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான ஷிரான் குணரத்ன,  குமுதினி விக்ரமசிங்க,  ஜனக் டி சில்வா, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன  ஆகியோரை உயர் நீதிமன்ற நீதியரசர்களாக  இன்று நியமனம் பெற்றனர்.

ஜனாதிபதி இதற்கான நியமனக் கடிதங்களை இன்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கினார்.

பாராளுமன்ற பேரவை இந்த ஆறு பேரினதும் நியமனத்துக்கு அங்கீகாரம் வழங்கியிருந்த நிலையில், இவ்வாறு அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் நேற்று வழங்கப்பட்டன.

 20 ஆம் அரசியல் திருத்தச் சட்டத்தின் பிரகாரம், உயர் நீதிமன்ற நீதியர்சர்களின் எண்ணிக்கை 11 இலிருந்து 17 ஆக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில்,  உயர் நீதிமன்றத்துக்கான புதிய நீதியரசர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, புதிய ஆறு நீதியரசர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 இந் நிலையில் குறித்த திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளின் எண்ணிக்கையும் 12 இலிருந்து 20 ஆக உயர்த்தப்பட்டது.

 இந் நிலையில் உயர் நீதிமன்ற நீதியரசராக மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதியாக இருந்த  எம்.எச்.டி.ஏ. நவாஸ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் , மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதியாக அர்ஜுன ஒபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனமும் இன்று வழங்கப்பட்டது. இதனைவிட புதிதாக 14 நீதிபதிகளுக்கான நியமனங்களும்  வழங்கப்பட்டன.

இதுவரை  மேல் நீதிமன்ற நீதிபதிகளாக கடமையாற்றிய   மேனகா விஜேசுந்தர, டி.என்.சமரகோன், பிரசாந்த டி சில்வா,எம்.டி.எம்.லபார், சி.பிரதீப் கீர்த்தி சிங்க, சம்பத் அபேகோன், எம்.எஸ்.கே.பி.விஜேரத்ன,ஆர்.குருசிங்க,ஜி.ஏ.டி.கனேபொல,கே.கே.ஏ.வி.சுவர்னாதிபதி ஆகியோரும்,  சட்டமா அதிபர் திணைக்களத்தில் சிரேஷ்ட  பிரதி சொலிசிட்டர் ஜெனரல்களாக செயற்படும் மாயாதுன்ன குரே, பிரபாகரன் குமாரரத்தனம் ஆகியோரும் சிரேஷ்ட சட்டத்தரணிகளான ஜனாதிபதி சட்டத்தரணி  டப்ளியூ.எம்.என்.பி. இட்டநல, மற்றும் எஸ்.யூ.பி. கரலியத்த ஆகியோரும் புதிய மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.