இந்தியாவில் உத்தரகண்ட மாநிலத்தில் நெடுஞ்சாலைகளை ஊர்வன மற்றும் பிற சிறிய விலங்குகள் கடந்து செல்வதற்கு ஒரு தனித்துவமான தொங்கு பாலத்தை வன அதிகாரிகள் அமைத்துள்ளனர்.

குறித்த பாலம்  மூங்கில், சணல் கயிறு மற்றும் புல் ஆகியவற்றால் 90 அடி (27 மீட்டர்) நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.

இது இந்தியாவில் அமைக்கப்பட்ட முலாவது "சுற்றுச்சூழல் பாலம்" ஆகும்.

உத்தரகண்ட மாநிலத்தின் பிரபலமான சுற்றுலாத் தளமான நைனிடால் நகருக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் கார்களை வேகமாக ஓட்டுவதனால்  பல விலங்குகள் பயந்து ஓடியுள்ளன.

இதனால் புதிததாக அமைக்கப்பட்ட பாலத்திற்கு விலங்குகளை ஈர்க்க அதிகாரிகள் இப்போது புற்களை வளர்த்து வருகின்றனர்.

"குறித்த நெடுஞ்சாலையில் பல ஊர்வன மற்றும் பிற சிறிய விலங்குகள் சுற்றுலா வாகனங்களால் கொல்லப்பட்டுள்ளன" என உத்தரகண்ட மாநில வன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாலம் தற்போது ஒரு சுற்றுலா அம்சமாக மாறியுள்ளது. பலர் புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுப்பதற்கு அப்பகுதியில் வாகனங்களை நிறுத்துகின்றார்கள். ஆனால் இது விரைவில் விலங்குகளையும் ஈர்க்கத் தொடங்கும் என்று வனத்துறை நம்புகிறது.

இது ஒரு அடர்ந்த காடுப்பகுதி என்பதால் யானைகள், சிறுத்தைகள், மான் மற்றும் காளைகள் இந்த பகுதியில் நகர்வதாக கூறப்படுகிறது.

இந்த பாலம் இப்பகுதியில் உள்ள சிறிய விலங்குகள் மற்றும் ஊர்வன விலங்குகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு அவற்றைப் பாதுகாக்கவும் உதவும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.