உலகிலேயே அதிகமான காலம் தனிமையில் வாழ்ந்த யானை எனப் பெயரெடுத்த காவன் யானை பாகிஸ்தானிலிருந்து கம்போடியாவுக்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.

36 வயதான காவன் என்ற யானை மீட்கப்பட வேண்டும் என்று அமெரிக்க பாடகர் சீர் பிரசாரம் செய்ததையடுத்து யானை பாகிஸ்தானின், இஸ்லாமபாத்திலிருந்து கம்போடியாவின் புதிய சரணாலயத்துக்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.

கம்போடியா சரணாலயத்துக்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ள யானை பிறிதொரு யானையுடன் எட்டு ஆண்டுகளுக்கு பின்னர் தொடர்பு கொள்ளும் புகைப்படம் ஒன்று வெளியாகி நெகிழ்வினை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1985 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து ஒரு வயதில் பாகிஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்ட காவன் யானை 24 ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்தது. 

பாகிஸ்தானில் இருக்கும் ஒரே ஆசிய யானை என்பதால், நீண்டகாலம் இஸ்லாமாபாத்தில் உள்ள மர்காசர் உயிரியல் பூங்காவில் மக்களுக்கு காட்சிப் பொருளாக காவன் பயன்பட்டது.

காவனின் தனிமையைப் போக்க 2009 இல் சாஹேலி எனும் பெண் யானை சேர்க்கப்பட்டது. அந்த யானையும் 2012 ஆம் ஆண்டில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தது.

இந் நிலையில் கடந்த 8 ஆண்டுகளாக தனிமையிலும், துயரத்திலும், கவனிப்பின்றி, சுவற்றில் முட்டி, முட்டி தனிமையை வெளிப்படுத்தி வந்த காவன் கம்போடியாவுக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கடந்த 8 ஆண்டுகளாக காவன் மிகுந்த துயரத்தில் இருந்தது. காவனின் மனநிலையும், உடல்நிலையும் மிகவும் மோசமானதை அறிந்த பாகிஸ்தான் விலங்குகள் நல அமைப்பு, அமெரிக்க பாடகரும், நடிகையுமான சீர், சர்வதேச விலங்குகள் நலஅமைப்பு முயற்சியால், காவனின் மீதான கவனம் ஏற்பட்டது.

குறிப்பாக ஃபோர் பாஸ் இன்டர்நேஷனல் எனும் விலங்குகள் நல அமைப்பு எடுத்த மிகப்பெரிய முயற்சியால், காவனின் உடல்நிலை சீரடைந்தது. காவனை பாகிஸ்தானிலிருந்து கம்போடியாவுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையையும் எடுக்கப்பட்டது.

35 ஆண்டுகால சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள காவனுக்கு நிச்சயம் கம்போடியாவில் சிறந்த துணை கிடைக்கும், புதிய வாழ்க்கையை வாழும் என்றும் கூறப்படுகிறது.