(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
மலையகதிற்கான தரமான சுகாதார சேவையை பெற்றுக்கொள்வது மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. தரமான சுகாதார சேவைகளை பெற்றுக்கொள்வதில் எமது மக்கள் படும் கஷ்டங்களை கண்டு நான் வெட்கமும் வேதனையும் அடைகிறேன் என தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர்  ஜீவன் தொண்டமான்  சபையில் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், மலையகத்தை பொறுத்தவரை எமது பகுதிகளின் வைத்தியசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மிக மோசமானதாகவே உள்ளது. சுகாதார வசதிகளும் குறைவானதாகவே உள்ளது. காலாகாலமாக எமது மக்கள் இந்த விடயங்களை எம்மிடம் கூறி வருகின்றனர். கண்டிப்பாக இதனை சீர்திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன். அதேபோல் குறித்த சில வைத்தியசாலைகளில் வைத்திய, மற்றும் தாதியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. லிந்துள்ள வைத்தியசாலையை இடமாற்றம் செய்ய வேண்டிய தேவை உள்ளது. எவ்வாறு இருந்தாலும் எமது பகுதிகளில் வைத்தியசாலைகளில் உட்கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருந்தும் வைத்தியர்கள் அதனை சமாளித்து சேவையாற்றி வருகின்றனர். அதற்காக நாம் அவர்களை பாராட்டியாக வேண்டும்.

அதேபோல் வெளி மாட்டங்களில் இருந்தும் எமது பகுதிகளுக்கு பலர் வருகின்றனர். கொவிட் நிலைமைகளை கருத்தில் கொண்டு அதனை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறோம். கொவிட் வைரஸ் நிலைமைகளை கட்டுபடுத்த அரசாங்கம் பல வேலைத்திட்டங்களை சிரமத்தில் மத்தியில் முன்னெடுத்து வருகின்றது. அரசாங்கம் மாத்திரமே இதனை முன்னெடுத்து வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாது. எனவே மக்களும் இதற்கான ஒத்துழைப்புகளை வழங்கியாக வேண்டும். விழிப்புணர்வு மூலமாகவே இதனை கட்டுப்படுத்த முடியும்.

மேலும் எமது அமைச்சின் சார்பில் எமது மக்களுக்கான நிவாரண வசதிகளை வழங்கி வருகின்றோம். மலையகதிற்கான தரமான சுகாதார சேவையை பெற்றுக்கொள்வது மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. எமது மக்களுக்கான சுகாதார வசதிகளை பெற்றுக்கொடுக்க வேண்டும். எமது மக்கள் மிகவும் கடினமான நிலையில் உள்ளனர். எனவே உடனடியாக இதில் மாற்றங்களை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 

கர்ப்பிணிப்பெண், சிறுவர்கள் என அனைவரையும் கருத்தில் கொள்ளவேண்டும். ஒரு சில வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. கண்டி மாவட்டத்தில் உள்ள தோட்டப்புறங்களில் உள்ள மருந்தகங்கள் பல மூடப்பட்டு வருகின்றது. எனவே இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.