குரோசியா நாட்டின் பிரதமர் ஆன்டிரெஜ் பிளென்கோவிக்கு இரண்டாவது பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

லேசான காய்ச்சலால் அவதிப்பட்ட பிரதமர் பிளென்கோவிக்கின் மனைவிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த சில நாட்களுக்கு முன் உறுதி செய்யப்பட்டது. 

இதன் தொடர்ச்சியாக பிரதமரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.  இதன் முடிவில் அவருக்கு தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது.

இதனால், பிரதமர் பிளென்கோ 10 நாட்களுக்கு தன்னை தனிமைப்படுத்தி கொள்ள முடிவு செய்துள்ளார். 

இந்நிலையில், பிளென்கோவுக்கு நடந்த இரண்டாவது பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி குரோசிய அமைச்சரவை சார்பில் டுவிட்டரில் வெளியிடப்பட்ட செய்தியில், தொற்று நிபுணர்கள் அளித்த பரிந்துரையின் பேரில் ஆன்டிரெஜ் பிளென்கோவிற்கு 2வது முறையாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.  இதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

எனினும், அவர் நன்றாக இருக்கிறார்.  வீட்டில் இருந்தபடி தொடர்ந்து அனைத்து பணிகளையும் மேற்கொள்கிறார்.  வைத்தியர்கள் மற்றும் நோய் தொற்று நிபுணர்கள் அளித்த அறிவுரைகளை பின்பற்றி வருகிறார் என தெரிவித்துள்ளது.

குரோசிய நாட்டில் 1.2 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்புகப்பட்டுள்ளதோடு, 1,600 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.